செவ்வாய், 3 டிசம்பர், 2019

#தமிழாய்த்_தமிழுக்காய்....*

தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்து
அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து
பிழையின்றி வாழப் பழகு.

சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய்
இழியும் பழியும் இழுக்கு.

ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி
விழுப்புண் விழைந்திட வாழ்வாய்த் தமிழுக்காய்
வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
சூழும் புகழ்ச்சிச் சுழல்

மொழியை அழித்தல்; முழியை மழித்தல்
விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்
மொழியைப் பழித்தல்; மழையை இழந்த
கழனி யழிதல் விழல்

_#கவியன்பன் கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக