*தலைப்பு* : *கவிதைக் களம்*
============================
எழுத்தெனும் நிலத்தில் எண்ண விதைகள்
அழுத்தமாய்ப் பதிய அமைந்த களமிது
வாளென விளங்கும் வசன வீச்சில்
ஆளுமை கொண்டு ஆர்த்தெழும் களமிது
காதலும் வீரமும் கவிதைச் சொற்களில்
சாதனை புரிய தக்கதோர் களமிது
வள்ளுவர் கம்பர் வசித்த இடமிது
அள்ளித் தந்த அருங்கவிக் களமிது
நீதி போதனை நிலைக்கும் தளமிது
ஆதிச் சுவடிகள் அழியாக் களமிது
சித்தரும் ஆன்மா சிலிர்த்திட கவனமாய்
நித்தமும் கவிமரம் நிறுவிய சுவனமாய்ச்
சிந்தனை மலர்கள் சிரிக்கும் தோட்டம்
வந்தன முறைகள் தந்ததோர் களமிது
கடலில் மூழ்கி கவிதை முத்தைத்
தொடர்ந்து வழங்கும் சொற்களின் களமிது
சாடலும் சினமும் சார்ந்த சீற்றம்
பாடலாய் ஒளிரும் பாசறைக் களமிது
விடுதலைப் போரை வித்திட பாரதி
சடுதியில் தெரிவு செய்த களமிது
உள்ளம் தங்கும் உணர்வின் ஓசை
அள்ளும் இசையின் அலைவிழும் தளமிது
பாடும் பொருளின் கூடும் கருவில்
நாடும் உருவம் தேடும் கருவறை
கானப் பூக்களின் கானகம் இவ்விடம்
தேனின் சுவையினைத் தேடும் வண்டுகளாய்க்
கவிஞர் கூட்டம் கவிதரும் களமாம்
புவியில் இஃதே புகழ்தரும் தளமாம்
இத்தளம் ஒன்றே இலக்கியத் தாயின்
புத்துணர்(வு) பாலைப் புகட்டும் முலையே!
*கவியன்பன் கலாம்*
0 கருத்துகள் :
கருத்துரையிடுக