உருவத்தில் நிறத்தில்நீ வேறு பட்டும்
.. ..உள்ளத்தில் உணர்வுகளில் மனித நேயம்
கருத்தில்நீ கொள்வதனால் புனிதம் காண்பாய்
.. ..கண்முன்னே பல்லுயிர்கள் பசியால் வாட
வருத்தத்தில் பங்கின்றித் திரிவர் தீயர்;
....வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே!
விருத்தத்தில் நானிங்குப் பாடி வைக்க
.....விரும்பியவர் படித்துணர்ந்தால் என்றும் நன்றே!
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. ...எண்ணமிலார்த் தான்மட்டும் போதும் என்பார்
இல்லார்க்கு ஈந்துவக்கும் எண்ண மின்றிச்
..... சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லோர்கள் வல்லவராய் மாற வேண்டும்
.. ...நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்லான செடிகளும்தான் புண்ணை ஆற்றப்
.. ...பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்கு கின்றான்?
வல்லோராய்ச் சேர்த்துவைத்த வசதி யாவும்
.... வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.... போங்காலம் நெருங்கியதும் சேர்த்து வைத்த
எல்லாமே இவர்கூட வாரா தென்று
.... எண்ணத்தில் உதிக்காமல் போன தேனோ?
நல்லோராய் வாழ்ந்தவரின் வரலா றெல்லாம்
.... ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!
உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ..ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.... பலநாட்கள் ஆகுமென்று அறிந்தே செய்யும்
கள்ளத்தை வளர்ப்பவர்கள் தொடரும் தீது
.. ..கருணையாளன் தருகின்ற தீர்ப்பால் வீழும்
பள்ளத்தை நோக்கித்தான் நீரும் பாயும்;
.... பாவிகளி வர்களைத்தான் பாவம் சேரும்!
-----'கவியன்பன்"கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக