செவ்வாய், 9 ஜூன், 2015

என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன்  - நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்


சின்னக் குழந்தை சிரிப்பு.

சத்தமிலா முத்தமிடும் வித்தகமே மொத்தமுமாய்ப்
பத்திரமாய் வைத்திருக்கும் சொத்தெனக்குச்- சித்தமதில்
நித்தமும்நான் பொத்திவைத்த அத்தனையும் எத்தனிப்பேன்
அத்தருணம்  ஒத்துவரும் காத்து

துள்ளியெழும் கிள்ளைமொழிப் பிள்ளையிடம் கொள்ளைகொள்ளும்

கள்ளமிலா வெள்ளையுள்ளம்  வெள்ளமென அள்ளிவந்து
பள்ளமெனும் உள்ளமதில் கொள்ளுவதால் தெள்ளுதமிழ்
வள்ளுவனின் பள்ளியிலும் உள்ளு



(வேறு)




உயிராய்ப் பிறந்த மழலையே வா

.......உணர்வில் நிலைக்கும் மழலையே வா

பயிராய் வளரும் மழலையே வா

...... பசுமைச் சிரிப்பாம் மழலையே வா

துயரை மறக்க மழலையே வா

......தூய்மை அன்பாம் மழலையே வா

வயிறும் வாயும் நிறைவதற்கு

......வருவாய் விருந்தாய் மழலையே வா!


சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்

............சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?

சன்னக் குரலில் சங்கீதம் தோற்கும்

............சாரீரம் அமைத்துப் படைத்தது யார்?
பின்னிடும் சின்னக் குழந்தை எழுந்து

..........பீடுநடை போடக் கற்பித்தது யார்?

புன்னகை ஒன்றால் மனத்தினை ஈர்க்கும்

.........பேரோளியை இதழ்களில் புதைத்தது யார்?

அந்த இறையை வணங்குகிறேன் - அவனுக்கு

..........யாதும் எளிதாகும் என்பதனால்

எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு

.........ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.



"கவியன்பன்” கலாம்

1 கருத்துகள் :

  1. மழலையின் சிரிப்பில் மகேசனும் மயங்கும் வேளையில் மனிதன் மட்டும் விதிவிலக்கா ??? குழந்தையின் சிரிப்பொலி குவளையம் நிறைக்கும் .

    பதிலளிநீக்கு