தாளாய் நினைப்பது தாளன்று நீளுகின்ற
நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமிக்கத்
தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே
கேளாய் மகனேநீ கேள்
படிப்படியாய் ஏறு படிப்பினில் தேறு
பிடிப்புடன் பற்றிப் பிடித்துப் பலமாய்த்
துடிப்புடன் போராடித் துன்பம் களைந்து
படியுமே வெற்றியும் பார்
எதிர்காலம் உன்கையில் எப்படி யாகும்?
புதிர்களாய்ச் சிந்தை புலம்பி அழுமே
கதிர்களாய் உன்னையும் காப்பாற்றி வந்தும்
பதர்களாய் ஆகாமல் பார்
அன்பாய்ப் பணிந்தால் அனைவரும் நாடுவர்
வம்பை விதைத்தால் வசைகளைப் பாடுவர்
அம்மாவின் சொல்லை அனுதினம் கேட்டுநட
சும்மாவே சுற்றல் சுகம்?
“கவியன்பன்” கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக