கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
நேர்மைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
வளர விட்டக் கொடுமையே!
அஞ்சி அஞ்சி வாழ்வதால்
அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவும் சொல்லுமே
பிழையாய்த் தமிழைக் கொல்லுமே!
பெற்ற தாயின் மொழியினைப்
பேணி வளர்த்தல் கடமையாம்
கற்றக் கல்வி மனத்தினில்
காத்து நிற்கும் தாய்மொழி
மற்ற மொழிகள் வேண்டினும்
வண்ணத் தமிழ்தான் விழித்திரை
பற்று கொள்க தாய்மொழி
பல்கி வளரும் பாரிலே!
கவியன்பன் கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக