ஞாயிறு, 8 டிசம்பர், 2019






தூறும் மழைதான் துயரம் துடைக்கும்
மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்

இடைமழை வரம்தரும் இயல்பில்  நல்லதாம்
அடைமழை   நகரம்   அழிப்பதில் தொல்லைதாம்

முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே

சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்
பாறை  மேலே படரும் சந்தம்

உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்
பயிர்களும்  மழையைப் பசியால்   உண்ணும்

வானம்  அழுது வடித்து வழியும்
ஈனம்   பொழுதில் இடிந்து ஒழியும்

நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து  நிறைக்கும்
நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்

மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை
எண்ணி  மகிழ்வதால் இனிமை வீசுமே

பஞ்சமும் நாட்டில் பரந்துளப் பசியும்
அஞ்சியோர் வாழ்வில் அல்லலும் மசியும்


ஆற்றின் ஓட்டம் அழகுற நண்பன்
சேற்றில் நாட்டும் செயலில் வம்பன்

கடலின் நீரால் கருவாய்ப் பிறந்தான்
திடலின் சேறால் திருவாய்ச் சிறந்தான்

பிறந்த கடலில் பின்னர் மீட்சி
சிறந்த வாழ்வியல் செப்பும் சுழற்சி





"கவியன்பன்” கலாம்,
           
         



0 கருத்துகள் :

கருத்துரையிடுக