சனி, 26 செப்டம்பர், 2015





அன்பை வெளிப்படுத்த வயசு
அளவு கோலில்லை என்றே கூறுகின்ற
அன்பின் முகவரி கொலுசு

முதுமை வந்தாலும் பெரிசு
மேவும் காதலையும் இப்படிச் சொல்லுகின்ற
மேன்மை மிகுந்த பரிசு

என்னவள்  தியாகங்கள் விரிக்கும்
என்ணி லடங்காத சேவைகள் சொல்லித்தான்
சின்னக் கொலுசால் சிரிக்கும்

கழுத்தில் கட்டியது தாலி
காலம் முழுவதும் இணைந்து வாழ்பவளின்
காலில் அன்பின் வேலி

கட்டிய கணவனுக்கு அன்று
கழுத்தை நீட்டி மணம்கொண்டு வாழும்நான்
காலால் பணிவேன் இன்று

சிரத்தை யுடனிவரும் எனக்குச்
சிரிக்கும் கொலுசுகள் பரிசாய்த் தருவதனால்
சிறிது முண்டோ பிணக்கு?


முதுமை காட்டுவதோ ”முகவரிகள்”
முழுமை அன்பைக் காட்டுகின்ற பரிசிலிற்றான்
முழுதும் அன்பின் முகவரிகள்

கரையைக் கடந்துவந்த நிலையிலும்
காலத் தூரிகை வரைந்திட்டக் கோலங்கள்
காதல் மட்டும் நிலைக்கும்


நெகிழும் அன்பால் நேர்த்தியாய்க்
கொலுசையும்
மகிழும் உன்றன் வாஞ்சை நோக்கவே
அணியும் என்னை அள்ளிதான் அணைக்கவும்
துணியும் போழ்தில் சொல்லும் புன்னகை
பரிசாய் நான்தரும் பளபள அணிகலன்
அரிதாய்ப் போகும் அந்த நேரமே!

-- அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக