திங்கள், 9 டிசம்பர், 2019



கண்ணதாசனுக்குக் கலிவிருத்த அஞ்சலி


வண்ணமாய்க்  கவிதையும் வடித்தவன் யாரது?

எண்ணமும் கேள்வியும் எழுத்தில் கூறியது

விண்ணவன் இடமுமே வினாக்கள்  எழுப்பியது

கண்களில் ஒற்றிடும்  கண்ண   தாசனே



பந்தயம் நடந்திடும் பாக்கள் போட்டியில்

அந்தரம் யாவையும் அடைத்து க் கூட்டியே

முந்திஇம்  மனிதனே முழுதும் கீதையில்

வந்திடும் போதனை வாழ்வின்  பாதையாய்த்



தூண்டிடும் வண்ணமே தொடந்து  தந்தவன்

வேண்டியே மானுடம் விரையும் பந்தயம்!

ஆண்டியும் அரசனும் அண்டும் யாவரும்

தாண்டிடும் விடைபல  தந்தான் பாவிலே



கையசைத் தவனவர் கவனம் சேர்த்திட

மெய்யசைத் தவரவன் மேன்மை தேடுவர்!

பொய்யசைத் தவர்வெறும் போலி யாகியே

பைய்யப் பாதையில் பழிகள் சேர்ப்பரே!



தடைபல கொண்டது தலைவன் பந்தயம்!

அடைந்திடும் இலக்கவன் ஆகி நின்றவன்

கடந்திடும் பாதையில் கவனம் சோர்ந்திடத்

தொடர்ந்திடும் ஞானமும் தொடந்து தந்தவன்!



முதற்றடை வென்றவன் மொத்தம் வென்றவன்

அதைத்தொடர்ந்  துமனதின் ஆன்ம ஆற்றலை

விதைப்பதன் போக்கிலே  விதைத்தான் தத்துவம்

திகைத்தனர் இவனது  திறமை  கண்டவர்!



தேங்கிடும் பாடலில் தேவை; கண்டனர்

ஏங்கிடும் ஒருசிலர் எழுந்தும் பாடுவர்

வாங்கிய ஆற்றலை வைத்துக் கோர்த்தவை

ஓங்கிடும் புகழினை உலகில் சேர்த்தவை



சோதியைக் கண்டிடத் தொடர்ந்த சோதனை

பாதியில் நின்றிடாப் பாதை  சாதனை

வேதியல் போலவே  வேதம்  போதனை

ஊதியம் பெறுவதில் உள்ளம் வேதனை



அர்த்தமும் உள்ளதாம்  அரிய தத்துவம்

அர்த்தமும் கிடைத்திட அவனின் புத்தகம்

கர்த்தரின் விவிலியம்  கண்டான்  இந்துவாய்

வருத்தமும் இன்றியே வடித்தான் பைபிளை!





போகியாய் இருந்தவன் போதக் கூடினான்

யோகியாய் ஞானமும் உணர்ந்து பாடினான்

மேகமாய்க் கவிகளை மோகத்  தூறலாய்ச்

சோகமாய் இருப்பவன் சோரா  ஊக்கமாய்ப்



பாடிட வைத்தவன் பாடற் கோத்தவன்

ஆடிட வைத்தவன் ஆசை தாசனாம்

தேடிடும் பதவுரைத் தேவை  இல்லையே

வாடிடும் யாவரும் வார்த்தைப் பாடலே



அற்புதம் இதுவெலாம் அவனின் பாடலில்

சொற்பதம் எதுவுமே சொன்னால் சொக்கிடும்

கற்பனை  எனினும் கடினம் இல்லையே

நற்பயன் தருவதை நாமும் காணலாம்!






 4)
மதுக்கவிஞனைப் பற்றிப் புதுக்கவிதை!







ஞானம்பாடிய

வானம்பாடி!



அகப்பையில் சோறுபோல்

மதுகோப்பையில் பாக்கள்!



“அர்த்தமுள்ள இந்துமதம்”

அர்த்தம் பெற்றது அவனால்!



கன்னித்தமிழை வாசித்தவன்;

கன்னியர்களை நேசித்தவன்!



தூக்கத்திலும்

ஏக்கத்திலும்

தாக்கத்தையும்

ஊக்கத்தையும்

ஆக்கத்தால்

ஆட்சி செய்தவன்!



ஈரிதழ்களில்

இன்பச்சுவை ருசித்தவன்;

ஈற்றெதுகைகளில்

மயக்கத்தை ரசித்தவன்!



அரசியலார்க்குப் “பிள்ளைத்தமிழ்”;

திரையிசைக்கு “அட்சய பாத்திரம்”



பள்ளிப்படிப்பை முடிக்காதப்

பல்கலைக்கழகம்!

பட்டம் பெறாத இவரை ஆய்ந்து

பட்டம் பெறுவர் பட்டதாரிகள்!



எம்.ஜி.ஆரும் , சிவாஜியும்

திரையில் அறிமுகம் ஆனது

இவரின் வரிகளின் கவிமுகம் தானே!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக