ஞாயிறு, 8 டிசம்பர், 2019




பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பதவியெனும் வரம்பெறவே தவத்தினிலும்
கசிந்துருகி நடுநிசியில் எழுந்துநின்று
கண்ணியமாய்த் தொழுகின்ற வேளையிலும்

சோதனைகள் துயரங்கள் துன்பங்கள்
சோதிக்க வரிசையாய் வந்துநின்று
போதனைகள் கூறிநிற்கும் வேளையிலும்
புகலிடமாய்த் தெரிகின்ற தனிமையினை

இனிமையென ஏற்றுவிடும் உள்ளந்தான்
இவ்வுலகின் ஏற்றமிகு ஞானிகளின்
தனிமையாம் தவமெனும் பாடமாகும்
தவறுகளைத் தடுக்கின்ற கேடயமாம்

குழந்தையும் கருவாக உயிரணுவும்
கர்ப்பத்தைத் தனிமையில் சந்திக்கும்
அழகுதமிழ்க் கவிதைகள் உருவாக
அறிவுணர்வும் தனிமையில் சிந்திக்கும்

பேறுபெற்ற புலவர்கள் கூட்டத்தில்
பெருந்திரளாம் வினாக்கணைகள் வீசுமவர்
நூறுவினா ஒன்றாகச் சந்தித்து
நோகாமல் விடைதருவர் தனித்துநின்று!

"கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக