மதிப்பினை இழந்தது மனித நாணயம்
விதிப்பயன் என்பது வீணர்க் கூவலே
துதிப்பவர் கூட்டமும் துய்த்தல் வேடமே
கொதிப்பினக் காட்டினால் நிற்கும் நாடகம்!
சிந்திய உழைப்பினைச் சிறிதும் போற்றிடாச்
சந்தையில் இந்தியா சரிவைக் காண்பதால்
இந்திய மதிப்பினை இழந்த நாணயம்
நொந்துதான் அழுவதா நினைப்பாய் தோழனே!
இருபுறம் உள்ளதால் இந்த நாணயம்
தருவதும் மனிதனின் தரத்தைக் கூறிட
வருவதும் அழகிய வழக்குச் சொல்லிலே
பொருளினை மதிப்பவர் புரிந்துகொள்ளுவர்!
இரண்டிலும் பொருட்களில் இருக்கும் வேற்றுமை
திரண்டநம் தமிழ்ச்சுவை தெரிந்து போற்றுவோம்
புரண்டிடா நாணயம்; பேசும் நாநயம்
இரண்டுமே இருப்பவர் எவரும் நாடுவர்!
--
"கலியன்பன்"கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக