செவ்வாய், 3 டிசம்பர், 2019

விடைகளைத் தேடு விரைந்து
=============================

கள்ளம் கபடம் கறைநிறைப் பண்புள்ள
உள்ளம் நிரம்பி உறைந்து நமக்குத்
தடைகளைப் போட்டுத் தடுத்தாலும் வெல்லும்
விடைகளைத் தேடு விரைந்து.

திக்குத் தெரியாத தீதுள்ள காட்டினில்
வைக்கும் நிலைதனை வையமுன்னை வைத்தும்
விடையறி யாத மிகுந்த துயரில்
விடைகளைத் தேடு விரைந்து.

வல்லவன் கையில் வலுவின் றியிருக்கும்
புல்லுமோ ராயுதம் பூட்டை யுடைத்து
மடைதனைக் காட்டும் மறுவழி கண்டு
விடைகளைத் தேடு விரைந்து.

அடுக்களைத் தன்னில் அடங்கிக் கிடந்தாய்
படிப்பதைக் கொண்டே படிப்படியாய் ஏற்றம்
இடுக்கணைக் கண்டுநீ இன்னுயிரை மாய்க்கா(த)
விடைகளைத் தேடு விரைந்து.

ஆக்கம்:
"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக