செவ்வாய், 3 டிசம்பர், 2019



அன்புநிறை இனியநீரை மனமாம் கேணி

     ஆழமாக ஊறவைத்து உயிராம்  ஆங்கு

     ஆங்குள உணர்வெனும் வாளி __ கொண்டுக்

கண்களாம் குடங்களில் ஊற்றிடக் கொட்டிடும்

    கண்களில் நீர்மழை கண்டால்__ அந்தக்

     கணபொழுது அன்பினை அறிவாய்!



அள்ளிநீ கொடுப்பதால் குறைவிலாச் செல்வமாய்

     அளவிலா வகையினில் திரும்பிக் __ கிடைக்கும்

      அற்புதச் சூட்சமம் அறிந்தால் __ மீண்டும்

உள்ளமே நிரப்பிடும் அன்பெனும் சுவையினை

    உலகெலாம் பரப்பிட நினைப்பாய் __ இந்த

    உன்னத விலையிலா அன்பை!



பக்தியாய்ப் பாசமாய் நட்பெனும் காதலாய்ப்

    பலவேறு கிளைகளைக் கொணட __ இம்மரம்

    பாரெலாம் நிறைவுடன் காண்பாய்__ இதன்

சக்திதான் என்னவாம் சந்தேகப் புயலிலும்

   சரிந்திடா வண்ணமாய் உறுதி __ கொள்ளும்

   சாதனை ஆணிவேர் அன்பே!

 

உலகமும் சுழல்வது உன்னத அன்பினால்

   உண்மையை உணர்வது உன்றன் __ கடனாம்

   உலகினைச் சுற்றியும் அன்பின்___ வேலி

கலகமும் தடுத்திடும் மெல்லிய நூலிழைக்

    காவலாய் அன்பெனும் உணர்வு ___ இருத்தல்

    கண்டுநீ போற்றிடு அன்பை!



மன்னவன் அன்பினால் அடிமையாய் மாறிட

     மயக்கிடும் மருந்தென அன்பு __செய்யும்

     மாயையை வியந்தனன் அஃதே __ போலச்

சின்னவன் குழந்தையாய்க் கிழவரும் மாறிடச்

    செய்திடும் வேலையும் அன்பு__ மட்டும்

    சிறந்தவோர் அற்புதமாய்க் கண்டேன்!



தட்டிடும் வேளையில் உறவுகள் சினத்தினால்

    தள்ளியே போய்விடும் எட்ட __ இயலாத்

    தூரமாய் விரைவுடன் என்பதால்- அன்பால்

கட்டிடும் உத்தியே சிறப்பென நெருக்கமாய்க்

   கட்டிநீ அணைப்பதால் எவரும் ___ உன்னைக்

   கலந்துதான் பேசுவர் அறிக!



குழந்தைகள் கிறுக்கலைக்  கொஞ்சியே மதித்திடு

    கவிதையாம் அஃதென வாழ்த்து__ உன்னைக்

    கண்டதும் அன்புடன் வருவர்__ என்றும்

பிழைகளைப் பொறுத்தலில் மிஞ்சிடும் அன்பினால்

    பிஞ்சுளம் பொழிந்திடும் பாச __ மழையாய்ப்

     பின்னரும் வருவரே  பேச!



என்பினை அசைத்திடும் இசையென அறிந்திடு

.  எதுவுமே அன்பினில் அடங்கும் __ இயக்கம்

    என்பதை உணர்ந்திட வேண்டும் __ அதனால்

அன்பினால் மோத்திடும் சப்தமே இசையென

    அறிந்திட முடியுமே அன்பு __ மனத்தில்

    ஆழமாய்ப் பதிந்திடும் போதில்!




(வேறு)



அடைக்கின்ற தாள்களின்றித் திறந்த உள்ளம்

      அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்

தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று

      தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று

படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே

       படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே

கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி

      கிளைகளையும் கேண்மையையும அன்பால் நேசி


--

"கவியன்பன்" கலாம்


0 கருத்துகள் :

கருத்துரையிடுக