வியாழன், 12 டிசம்பர், 2019





சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்
முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி
நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்
பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்
கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்
இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்
கடைக்கண் திறக்காதோ காதல் *மவுனத்தில்*
மடைத்தாள் திறக்காதோ மனம்


கண்ணுக்குள் புதைந்துள்ள காதலை நாமிருவர்
மண்ணுக்குள் புதைந்து மடிகின்ற வரைக்குமாய்ச்
சொல்லாமல் போவாயோ சொல்லடடிப் பைங்கிளியே
நில்லாமல் போவதெங்கே நித்திரையைப் பறித்தவளே
அள்ளு முனதழகை அள்ளாமல் விடுவேனா
உள்ளும் புறமும் உனதன்பே ஈர்த்திடுதே
காதலுக்குக் கண்ணில்லை கண்ணுக்குட் காதலுண்டு
ஆதலினால் காத லழகு.

உன்னையா ஐயுற்றேன், உன்னையா சோதித்தேன் உத்தமியே
என்னையேன் இன்னும்நீ சோதித்தாய் என்றுதான் ஏங்கினனே
என்னதான் சொன்னாலும் உன்னைத் துறப்பேனா ஏந்திழையே
கன்னத்தில் சூடேற்றக் கண்ணுக்குள் காதலைக் காட்டுவாயே

மன்றலில் உட்காரும் காலமும் என்காதல் மாறிடாதே
நன்றாய் மனைவியா யாகியும் காதலும் நீங்கிடாதே
தென்றலின் தீண்டுதல் பூக்களின் வாசனைக் கூறிடுமே
உன்றன் கடைக்கண் துடிப்புதான் காதலை ஊட்டிடுமே


--
*
கவியன்பன்” கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக