ஞாயிறு, 8 டிசம்பர், 2019









கவிஞனின் அகம்
காட்டும் கண்ணாடி
கவிதை

ஒரு கவிஞனின் அகம்
மற்ற கவிஞனின் முகம்
காட்டும் கண்ணாடி

வாழ்க்கைப் பிரதிபலிப்பென
வலியுறுத்தும் நோக்கம்
கண்ணாடி

கண்ணாடியின் முன்னுள்ள
கடுகளவுத் தூசியையும்
காண வேண்டுமெனில்
கண்ணாடியை முகத்திலிருந்துக்
கழற்றித்தான் பார்க்க வேண்டும்!

மனிதனின் சிற்றறிவை
மகாஞானியாய்ச் சுட்டிக்காட்டும்
மகிமை தான் கண்ணாடி


முகம் பார்க்கும் கண்ணாடி
முழுவதும் தூசியென்றால்
உண்மை முகம் காண
உன்னால் முடியுமா?
அகம் எனும் கண்ணாடியில்
அழுக்காறு இருந்தால்
அறிவெனும் ஒளிதான் தெரியுமா?

கண்ணாடியைப் போலவே
கணவனும் மனைவியைக்
கவனமாய்க் கையாளுக!
உடைந்த கண்ணாடி
ஒட்டினாலும் உதவாது
உடைந்த உள்ளம்
ஒருபோதும் ஒன்றாது!

கண்ணாடி வீட்டிலிருந்து
கல்லை வீசினாலும்
முன்னாடி யோசிக்காமல்
மூர்க்கமாய்ப் பேசினாலும்
பின்னாடி ஏற்படும்
பிளவுகளால் பயனேது?


கவனம் எனும் பாடத்தில்
கண்ணாடி ஓர் ஆசான்

உன்னையே நீ அறிய
உன் முகம் யாதெனக் கூறும்
உற்ற நண்பன் கண்ணாடி


“கவியன்பன்” கலாம்,

0 கருத்துகள் :

கருத்துரையிடுக