சனி, 7 டிசம்பர், 2019


வானம் ஏகும் பறவைகட்கு
              வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்குக்
             குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
             மறைந்துக் காணும் நம்பிக்கை;
ஆன தினாலுன் நம்பிக்கை
           ஆற்றல் கூட்டும் வாழ்க்கையிலே

எப்படிப் புரண்டாய்? எப்படித் தவழ்ந்தாய்?
           எப்படி எழுந்தன கால்கள்?
அப்படித் தானே உயர்ந்திட முயல்வாய்
            ஆயுளை முழுவதும்  நம்பி
இப்படித் துணிவாய் உளம்நிறைக் கனவும்
      இயலுமாம் நனவெனத் தம்பி
 ஒப்பிலா உழைப்புத் தருவது உயர்வு
      உண்மையாய் நம்பினால் தெளிவு

உந்து சக்தி நிரம்பியுள்ள
           உனக்குள் திறமை உள்ளதைப்பார்
நொந்து மடிந்தால் வீணாக
          நொடியில் பாயும் வறுமைநிலை

ஒவ்வொன்றாய் நிமிடந் தோறும்
           உழைப்பாலே மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பிக் கிட்டும்
         அளவற்ற செல்வப் பரப்பு


காலம் பின்னர் வருமென்று
         கனவு காண வேண்டாவே
ஞாலம் தன்னில்  உயர்ந்தவர்கள்
        நாளும் தளரா முயற்சியாமே


"கவியன்பன்" கலாம்



0 கருத்துகள் :

கருத்துரையிடுக