06/12/2014 நடந்த கவியரங்கில் என்னைக் கவிபாட , கவியரங்கத் தலைவர் உயர்திரு கவிஞானி யோகிவேதம் அவர்கள் அழைத்தார்கள் இவ்வாறு:
கவியன்பன் கலாம் அவர்களைக் கவிபாட அழைப்பேன்..
**********
கவியன்பன் கலாமுக்கு கவியோகியின் அழைப்பு..
***************************
அதிராம பட்டினத்தில் அவதரித்து அபுதாபியில்
அதிக வேலைசெயும் அன்புக் கவிஞரிவர்!
.
கவிஞர்களின் மனத்தில் அன்பால் கட்டுண்டவர்;
கவியன்பன் கலாம்.. பள்ளிப் படிப்புமுதல்
..
கவிஇயற்றும் ஆற்றலில் கரைகண்டவர்;ருசிகண்டவர்!
கவிதைகளில் பரிசுபெற்றுக் கவர்ந்தார் நம்மனத்தை;
‘கவித்தீபம்’, முதலான கவிவிருது அடைந்தவர்!
கவிதைச் சங்கமமெனும் இவர்அமைப்பில் அடியேனும்
.
முதற்பரிசு பெறமுயன்றுப் பயனடைந்தேன்; நன்றிசொன்னேன்;
முதிய- ‘துபாய் தமிழர் சங்கமச்’ செயலாளர் இவரை
.
இனிப்போகும் இடத்தை இன்பமாய்ச் சொல்லவே
கனிவுடன் அழைக்கின்றேன்.. வருக அன்பர் கலாம்!
***************************** ******(கவியோகி)
என் கவிதை இதோ:
”கவியரங்கம்-41” தலைப்பு : "எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்? “
இறைவாழ்த்து:
மறையுடன் மாசிலா மாநபி வழங்கிய
இறையவன் ஆசியைப் போற்றியே துவங்கினன்
தலைவர் வாழ்த்து:
கவிஞானி யோகியார் காட்டும் விளக்கம்
கவித்திசை நோக்கிக் கவிதைப் படகைச்
செலுத்தவே வந்தனன்; சீர்மிகு வாழ்த்தைச்
செலுத்தினேன்; பாடவே செப்பு.
அவை வாழ்த்து:
யாப்பின் வழிநின்று யாத்திடும் பாக்களில்
மூப்பின் வழிகாட்டல் முன்னேற்றம் இங்குதான்
சந்த வசந்தமென்னும் சங்கமம் கொண்டோர்க்குச்
சொந்த மெனவாழ்த்தும் சொல்
எங்கே துவங்கி இங்குவந்தோம்
என்ன தான்நாம் செய்கின்றோம்
எங்கே சென்று முடிந்திடுவோம்
என்று தான்நாம் அறியாமல்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
இலக்கே இல்லாப் பயணமென
இங்கே வந்து இயற்றுகின்ற
இனிய பாடல் சொல்லட்டும்!
தன்னை யறிந்தால் இறையவனைத்
தானே யறிவான் என்றனரே
தன்னை யறியத் தனிநேரம்
தானே ஒதுக்க முடியாமல்
தன்னைச் சுற்றித் தனியுலகம்
தானே போட்டுக் கொண்டதனால்
இன்னும் அறியா மல்நாமும்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
முன்னோர் சொல்லை ஏற்காமல்
முட்டாள் என்றே சொல்லுகின்றோம்
பின்னோர் சொல்லில் மலிந்துள்ள
பிழைகள் காண முடியாமல்
இன்னல் வந்தால் முடிவுகளை
எடுக்க முடியாக் குழப்பத்தில்
பின்னே நோக்கிச் செல்வதனால்
பிறகு எங்கே போகின்றோம்?
வாசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
வளமார் தமிழை மறந்துவிட்டோம்
நேசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
நெஞ்சில் ஈரம் துறந்துவிட்டோம்
யோசிப் பதற்கும் நேரமின்றி
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
காசில் குறியா யிருக்கின்றோம்
களவும் செய்யத் துணிந்துவிட்டோம்!
வேங்கை தின்ற மனிதனையும்
வேடிக் கைதான் பார்த்தோமே
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
இதயம் இல்லா மானிடராய்?
ஆங்கே ஒருவர் யோசனையை
ஆர்க்கும் வழங்க முயன்றனரோ?
தாங்கள் பதியும் விழியத்தில்
தானே கவனம் செலுத்தினரே!
மண்ணின் ஆதிப் பழக்கமெங்கே
மரபும் உடையும் மாறியதேன்?
விண்ணில் பறக்க முயன்றோமே
வியர்வை வழியும் விவசாயி
புண்ணாய் வெந்து மடிவதையும்
புரியா தெங்கே போகின்றோம்?
உண்ணும் நேரத் திலொருநொடி
உணர்வோம் உழவன் நிலையையுமே!
காடு, கழனி, தோட்டங்கள்
காசு பணத்தால் அழித்துவந்த
வீடு என்னும் காடுகளால்
வீட்டுக் குள்ளே காற்றெங்குக்
கூடும் என்று சிந்தையின்றிக்
கூறு கின்றோம் “காற்றில்லை”
ஏடும் உரையும் இருந்தென்ன
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
பட்டி தொட்டி எங்கணுமே
பசுமைப் புரட்சி செய்திடுவோம்
எட்டிப் பார்க்கும் எம்வீட்டில்
இசைக்கும் காற்றும் மழையுடனே
தட்டிக் கழிக்கும் அதிகாரம்
தரமில் “மவுலி வாக்கத்தின்”
கட்டி டங்கள் விழுந்தனவே
காசால் எங்கே போகின்றோம்?
”கத்தி” யுடனே வந்திங்குக்
கத்த வில்லை கதறவில்லை
புத்தி யிலேதான் பட்டதனால்
புரிய வைத்தேன் பகுத்துணர
பக்தி யுடனே யான்போற்றும்
பாடல் வனையும் புலவர்கள்
சக்தி தந்த ஆற்றலிது
சந்த வசந்தக் குழுமத்தில்!
”கவியன்பன்” கலாம்
பின்னூட்டங்கள் ஆங்கே இடப்பட்டவைகள்:
1)
திரு கலாமின் கவிதை நன்று!சத்தம்போட்டுச் சொல்லாமல்
சந்தம்போட்டுச் சொல்லுகிறீர்!
தத்தம்வழியில் நாம்போனால்
சமுதாயத்தின் வழியென்ன?
வித்தம்காக்க மரத்தடியில்
வேரையருத்துப் புதைப்பதுவோ!
சித்தத்தெளிவை வலியுறுத்திச்
சீறிப்பாயும் கவிதையது!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
2)
'அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை குழம்பிப் போச்சு
அணுகுண்டத்தான் போட்டுக்கிட்டு அழிஞ்சுபோக லாச்சு'
'கண்ணும் கண்ணும் பேசிக்கிது மூக்கும் மூக்கும் முட்டுது
பெண்ணும் ஆணும் போட்டி போட்டுக் கையைக் காலை ஆட்டுது'என்றெல்லாம் நடிகர் டணால் தங்கவேலு ஒரு படத்தில் பாடிய கலியுகச் சிதைவுகளை
உங்கள் கவிதை நன்றாக வருணித்துச் செல்கிறது.ரமணி
அணுகுண்டத்தான் போட்டுக்கிட்டு அழிஞ்சுபோக லாச்சு'
'கண்ணும் கண்ணும் பேசிக்கிது மூக்கும் மூக்கும் முட்டுது
பெண்ணும் ஆணும் போட்டி போட்டுக் கையைக் காலை ஆட்டுது'என்றெல்லாம் நடிகர் டணால் தங்கவேலு ஒரு படத்தில் பாடிய கலியுகச் சிதைவுகளை
உங்கள் கவிதை நன்றாக வருணித்துச் செல்கிறது.ரமணி
3)
கலாமின் கவிதைக்குக் கற்கண்டு தந்து
சலாம்பாய் உமக்கென்றேன் ; சந்த நிலாவொளி
வீசும் வலையில் விழுந்த வரிகளால்
நேசம் வளர்த்தீரே நீர்.
அன்பன்,
மீ.விசுவநாதன்
4)
எண்ணத் தெளிவில்லா இந்நாள் மனிதரின்
கண்ணைத் திறந்தார் கலாம்.
கண்ணைத் திறந்தார் கலாம்.
. அனந்த்
5)
கவியரங்கத் தலைவர் யோகி வேதம் அவர்களின் பாராட்டுப் பின்னூட்டம்:
தன்னை யறியத் தனிநேரம்
தானே ஒதுக்க முடியாமல்
தன்னைச் சுற்றித் தனியுலகம்
தானே போட்டுக் கொண்டதனால்
இன்னும் அறியா மல்நாமும்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?..
****************************** ******
ஆகா! என்ன அழகு.. என்ன உண்மைத்தத்துவ வரிகள்1
கலாமின் இந்த வரிகளை எண்ணிஎண்ணி மகிழ்ந்தேன். வாழ்க அன்பர் கலாம்!,
யோகியார்
6)
சமுதாயம் போகும் வழியைச் சுட்டிக்காட்டும் பாட்டு நன்றாக இருக்கிறது ஐயா. பாராட்டுகள்.
சொலாக்கலாம் சூதைத் தொலைக்கலாம் சொல்லில்
கலாமின் சொலையேற் கலாம்.
சொலாக்கலாம் சூதைத் தொலைக்கலாம் சொல்லில்
கலாமின் சொலையேற் கலாம்.
அவனடிமை.
7)
பாதை அறியாப் பயணக் குறைகளின்
பட்டியல் தந்தது சுகம் !
கவிஞர் கலாமுக்கு பாராட்டுகள் !பட்டியல் தந்தது சுகம் !
சுவாமிநாதன்
8)
கலாம் ஐயா வரைந்த
காலத்தின் கோலம்...
ஒரு எச்சரிக்கை மணி....
கவனிக்கவில்லை எனில்
அவர் கணித்தது போல்
கனிந்துவிடும்
துரை
❤💋👅👄💙💖💕💔💓💜💛💚💘💝💟💞
பதிலளிநீக்கு