செவ்வாய், 3 டிசம்பர், 2019

அன்பானது குடும்பம்
====================

அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம்
நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம்
துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம்
மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம்

வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம்
திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும் குடும்பம்
நட்டமோ இலாபமோ நன்மையாம் குடும்பம்
பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் குடும்பம்

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்
வானோடு நிலவுபோல் வாழ்வோடு குடும்பம்
தேனோடு பால்போல் தெவிட்டாத இன்பம்
மானோடு மானம்போல் மாண்புமிகு குடும்பம்

வாசமலராய் என்றும் வாழ்க்கை மணக்கும்
வீசுகின்ற தென்றலாய் விலகாது நிற்கும்
பேசியேநீ பழகினால் பாசங்கள் புரியும்
நேசித்து வாழந்தால்தான் நெருக்கங்கள் தெரியும்

ஆக்கம்;

*கவியன்பன் கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக