செவ்வாய், 3 டிசம்பர், 2019






நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை

பாக்குச் சுண்ணாம்புடன்

நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!



ஒற்றை வரிகளில்

ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்

பாக்களில் புதைத்தவனின்

உடல்தான் புதைக்கவோ

எரிக்கவோ பட்டிருக்கலாம்; ஆனால்

அவனின் பாக்களைப் புதைக்கவோ எரிக்கவோ இயலா.



செக்கச் சிவந்த மேனி;

மிக்கச் சிறந்த ஞானி



மரபுக்குள் கட்டுண்டவன்;

புதுமைக்குள் புகுந்து விளையாடியவன்





வண்ணதமிழிலும் செய்யுள்

வனைந்தான்;

வாலிபத் தமிழிலும்

வாலிபால் விளையாடினான்

வாலி என்ற தமிழ்க்கேணியின் வாளி!



மீனைத் தொடாத வகுப்பில் பிறந்தவனோ,

“நேற்று வைத்த மீன் குழம்பை”

போற்றும் அளவுக்குச் சுவைக்க வைத்தவன்!



இலங்கையில் சென்று

‘இடியப்பம் பொதியானம்”

பசியாற என்றெல்லாம்

வழக்குச் சொல்லை

வழங்கி வடித்தவன்



”ஊக்குவிப்பவனுக்கும்

ஊக்குவிப்பது வேண்டும்’

என்று ஊக்குவித்தவன்!



கண்மூடியதால்

மண்மூடியவர்கள்

அல்லர்; இவர்களை

மண்மூடியதால்

கண்மூடியவர்கள்” என்று

பூகம்பத்தில் மரணித்தவர்களை

ஈரடிகளால்

ஈரம் கசிய நினைத்தவன்!



ஈழத்தமிழர்களின்

ஈரத்தையும்

வீரத்தையும் பாடிய

சோழத்தமிழன்!




-- "கவியன்பன்" கலாம்





0 கருத்துகள் :

கருத்துரையிடுக