புதன், 4 டிசம்பர், 2019



மழலையின் பேச்சில் மயங்கிய பின்னர்
குழந்தையின் சொல்லில் குறைகாணா நாங்களும்
எல்லை கடந்ததோர் இன்ப முணருதல்
சொல்லைக் கடந்த சுகம்.

பிஞ்சுக் கரங்கள் பிடித்ததொரு தூரிகை
நெஞ்சைக் கவர நிரம்ப வரைவதில்
செல்லக் கிறுக்கல் செழுமைப் படங்களாய்ச்
சொல்லைக் கடந்த சுகம்.

விண்மீன் ஒளிதனை விஞ்சும் சுடராகக்
கண்மீன் ஒளிரும் கவர்ச்சி இளநகை
மெல்ல மனங்களை வெல்லும் நிலைதனில்
சொல்லைக் கடந்த சுகம்.

அழுக்குப் படியா(த) அவர்களின் அன்பில்
இழுக்கும் வணிகமும் இல்லாத தூய்மையுடன்
பல்லும் பதியாத பச்சிளம் முத்தமதில்
சொல்லைக் கடந்த சுகம்.

கன்னத் திலோடும் கருவிழி நீரைத்தன்
சின்னக் கரங்களால் தீண்டித் துடைக்கின்ற
நல்ல குணத்தை நனிசிறந் தேற்பதில்
சொல்லைக் கடந்த சுகம்.

மெய்நிறை முத்தங்கள் மேனித் தறியினிலே
நெய்திடும் வேளையில் நீயுணரும் போதினிலே
எல்லாக் கவலைகளும் இல்லா நிலைபோல
சொல்லைக் கடந்த சுகம்.

பொக்கைச் சிரிப்பையும் போற்றிப் புகழுங்கள்
மிக்க நலம்தர மேவும் நெருக்கத்தில்
கல்லும் கரையும் கனிவானப் பார்வையில்
சொல்லைக் கடந்த சுகம்.

அன்பின் உரசலால் அங்கே சுடர்விடும்
இன்ப நறுமணம் ஏற்று நுகர்வதால்
நில்லா மனவோட்டம் நிம்மதி காண்பதில்
சொல்லைக் கடந்த சுகம்.

காற்றில் கவிதை பறிக்கும் கரங்களும்
போற்றி விரல்கொடுத்துப் போகும் பொடிநடையும்
வில்லாய் வளையும்  விழிவீச்சும் காண்கையில்
சொல்லைக் கடந்த சுகம்.


குழிநோக்கிச் செல்லும் குறுந்தளிர் கால்கள்
விழிப்போடு நின்று விழாமல் தடுத்தலும்
கொல்ல விளைந்த குழிகளை மூடுவதும்
சொல்லைக் கடந்த சுகம்.



கவியன்பன் கலாம்




0 கருத்துகள் :

கருத்துரையிடுக