செவ்வாய், 3 டிசம்பர், 2019


ஆசிரியர் தின வாழ்த்து
======================

கற்பிக்கும் ஆசிரியர் எல்லாரும்__ தன்
    கடமைதனில் பாருலகில் ஒப்புவமை இல்லாராம்
சிற்பிப்போல் மாணாக்கர்ச் சிந்தை __மிகச்
     செதுக்கிடுவர் அஃதே பெரிதான விந்தை!

ஆசிரியர் செய்யும் தொழிலால் __நம்
       ஆர்வமும் கூராகும் வாழ்வின் எழிலால்
நேசமுடன் காட்டும் மதிப்பு__அவர்
      நேர்மையை நம்பிள்ளைக் காணும் பிடிப்பு!

கண்டிப்புக் காட்டும் கடமை__அவர்
   கண்ணியம் சொல்லும் குணத்தின் உடைமை
தெண்டித்து முன்னேற சொல்லும்__அவர்
     திறன்மிகு வார்த்தையால் நம்வாழ்வு வெல்லும்!



மாற்றிவிடும் நம்மவர் வாழ்க்கை__
அவர்
      மனமுவந்து சொல்லும் அறிவுரை வார்த்தை
ஏற்றிவிடும் செய்கையில் ஏணி__அவர்
      எப்போதும் ஓடிக் களைக்காத தோணி!

சீர்படுத்தும் நோக்கில் உளியாவார் _ நாம்
    சேரும் பயண இருளில் ஒளியாவார்
நேர்படுத்தும் பாதை வழிகாட்டி__அவர்
      நித்தமும் ஓரிடத்தில் நிற்கின்ற கைகாட்டி!

அறிவெனும் கேணியின் ஊற்று__அவர்
   "ஆக்ஸிஜன்" போன்றே இயக்குகின்ற காற்று
நெறியெனும் கோட்டிலே  நம்மை _அவர்
    நிற்கவைத்து ஆட்டுவித்தல் கட்டுப்பாட் டுண்மை!



"அக்னிச் சிறகாய்"ப் பறக்க__ நம்
     அப்துல் கலாமய்யா போலச் சிறக்க
அக்னியின் குஞ்சென பாரதியாய்__தன்
    அறவழியில் ஓட்டி நடத்துவதில் சாரதியாம்!

இராதா கிருஷ்ணர் பிறந்தநாள்__இன்று
     ஏற்றம் தருமாசான் வாழ்வில் சிறந்தநாள்
நிராசை பெறும்ஏணிப் படிதான்_ இவர்
   நிலைமட்டும் அப்படியே "ஏனிப் படியாய்?"


ஆக்கம்:

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.




0 கருத்துகள் :

கருத்துரையிடுக