செவ்வாய், 3 டிசம்பர், 2019

தலைப்பு: *இயற்கையைக் காப்போம்*

உபதலைப்பு: *காடு*
=================
நாளும் மெலியும் நாட்டின் பசுமை

கோளும் எரியும் கோடை வெயிலில்

உயிராம் காற்றும் உணவாம் நீரிலாப்

பயிரும் வாடும் பலமிலா வேருடன்

வானத் தாயின் வல்லமை ”ஓசான்”

மானத் தைத்தான் மண்ணிலே உரித்திட

”புறவூதா” தீயது புலம்பெயர்க் காட்சி

‘நிறமிலா  நிலையினில் நிலமும் எரியும்

பச்சைத் துணியிலாப் பால்வெண் விதவை:

இச்சை தணித்திடுமா இந்தக் காகிதம்

மரத்தை அறுத்து மாளிகைக் கூடம்

வரத்தைத் தருமா வானிலே மாமழை

காசின் தணப்பில் காற்றின் துரோகிகள்

வீசும் அனலில் வியர்க்கும் வறியவர்

ஓயா  துழைக்கும் ஓங்கிய மரங்களை

ஓயா  தழிக்கும்  ஓட்டை மனிதனால்

சாபமும் கொண்டு சாயும் காடுகள்

கோபமும் கொண்டு குதறும்  ”சுனாமி”

பிழையும் செய்தாய்ப் பிழைமிகு மனிதா

மழையும் எப்படி வரம்தரும் எளிதாய்?

செயற்கைக் காட்சிச்  செயலிலா மாற்றமாம்

இயற்கைத் தாய்தான் எழில்மிகுத் தோற்றமே!






“கவியன்பன்” கலாம்







--

0 கருத்துகள் :

கருத்துரையிடுக