வியாழன், 5 டிசம்பர், 2019


வரம் என்னும் கனிதரும்
மரம் தான் தவம்!

இறைவனுக்கு
இணை கற்பிக்காத
முறையான வழிபாடும்
மேன்மை தரும் தவம்!

சுவனமென்னும் வரம்
சுபச்சோபனம் தரும்
கவனமுடன் நோனபாய்க்
கடைபிடிக்கும் தவம்!

ஏழைக்குரிய வரியை
ஈந்துவக்கும் நெறியை
ஆழமாய் நோக்கினால்
ஆங்குண்டு தவம்!

இறுதிக் கடமையாய்
இறையில்லம் நோக்கி
உறுதியுடன் பயணித்தல்
உண்மையிலே தவம்!

பாவம் களைந்து
பகைமை ஒழிந்து
கோபம் இல்லாக்
குணமே தவம்!

காட்டில் தனித்துக்
காட்டுதல் தவமன்று;
நாட்டில் நன்மைகள்
நாட்டுதலே தவம்!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக