வியாழன், 5 டிசம்பர், 2019




கோடிக் கணக்கில் அணுக்களையும்
........கோத்துப் போட்டி வளர்த்ததனால்
ஓடி நீச்சல் அடித்ததனால்
.....ஊறும் கருவாய் உதித்ததுவே!


பாரை நோக்கி வந்ததுமே
...பாலைக் குடிக்கச் சத்தமுடன்
ஊரைக் கூட்டி மகிழ்வதெலாம்
....ஊறும் போட்டி மனத்தினாலே!


நாளும் பொழுதும் வளர்வதற்கு
.....நாடும் துணிவால் புரள்வதற்கு
நீளும் கைகள் பிடிப்பதற்கு
....நீச்சல் துவங்கும் துடிப்புடனே!


ஊன்றி எழுந்து நடந்திடவே
...ஓடித் தவழ்ந்துக் கடந்திடவே
தோன்றும் உணர்வால் முயன்றிடவே
....தோல்வி அறியா எழுச்சியாமே!


பாடம் படிக்கும் போதினிலும்
....பாரில் வெல்லும் போட்டிகளும்
ஓடம் போலத் தேடுதலும்
....ஓயா உழைப்பின் நீச்சலாமே!


ஏணிப் படியாய் முயற்சிகளும்
...ஏற்கும் மனத்தின் பயிற்சிகளும்
நாணிக் குறுகாத் துணிவுகளும்
...நாடும் வெற்றிக் களிப்புகளாய்!


நீயும் காணும் சுவனங்கள்
...நீயே கொண்ட கவனங்கள்
வாயில் தட்டும் தருணங்கள்
...வாய்ப்பே ஆகும் அறியுங்கள்!


ஆடை, உணவு தேடித்தான்
....ஆளாய்ப் பறப்போம் ஓடித்தான்
கோடை, குளிரும் பாராமல்
....கொள்வோம் எதிராய் நீந்தித்தான்!..


சூழும் பகைகள் எதிர்த்தவரை
...சோகம் எல்லாம் மிதித்தவரை
வாழும் வாழ்க்கை துணிந்தவரை
.....வாழ்த்தும் நீச்சல் அறிந்தவரை!


ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான்
........ஆழி அலைகள் தவழ்ந்திடுதே
சேர்க்கும் உடலின் குருதியெலாம்
...சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்!
...

ஓங்கி அடிக்கும் உளியாலே
...ஓடிப் போகும் மலைதானே
வீங்கி வளரும் செடியாலே
....வீழ்ந்துப் போகும் தடிபாறை!


எட்டா திருக்கும் இமயமும்தான்
.....ஏறிப் பழக இறங்கிவிடும்
கிட்டா திருக்கும் உயர்வுகளும்
...கீழே பணியும் முயற்சியினால்!


--
"கவியன்பன்" கலாம்





0 கருத்துகள் :

கருத்துரையிடுக