திங்கள், 2 டிசம்பர், 2019

விழியில் விழுந்த விதை
=======================


விழியில் விழுந்தது "அவள்" எனும் விதை
ஊரறிய மணம் பரப்ப மாறியது
உணர்வு மிக்க கவிதையாக!


விழியெனும் ஊடகம்
வழியாக உட்கார்ந்திருக்கிறாய்
மொழிவதற்கு இயலாமல்
ஊமையாய் மவுனமொழியால்
ஓடி ஒளிந்து "விழிக்கிறாய்"
ஊர்கூடி என்னைப் பழிக்கிறார்!

விழியில் விழுந்த விதையே
இதயமரத்தில் நீரூற்றினாய்
இலைகளும் கனிகளுமாகிட
இமைகள் குடைபிடிக்க
இதமாக வளருது காதற்பயிர்!

விழியில் விழுந்த விதையை
வேண்டாமென்றுத் தடுக்குமா
மனநிலத்தின் மனநிலை
மறுமொழியொன்று கொடுக்குமா?
ஏங்கி நிற்கின்ற உன்மனத்தை
இருவிழி இமைகளெனும்
படபடக்கும்
பட்டாம்பூச்சிகள் பகருமா?
காதற் பயணத்தின் வாகனம்
கடிவாளமிட்டு நகருமா?


விழியில் விழுந்த விதையே
உளநிலத்தில் மரமாகி
வளமான கனியாகு முன்பே
களவாடிச் செல்லும் ஓட்டமோ
களமாடிக் கொள்ள நாட்டமோ?


*கவியன்பன்  கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக