வியாழன், 2 ஜூலை, 2015

பெண்ணிவள்..!


காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
......கனவிலும் நினைவிலுமே
ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
..ஒடுங்கிடத் துணையாக
ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
....ஆறுதல் பெற்றிடத்தான்
போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
....புரிந்தவர் வென்றனரே!
.

பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
....பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
...பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
...காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும்
...விளக்கதன் சுடராவாள்!


பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
....பிழைகளும் உன்னிடந்தான்
உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
....உதவிட ஏங்கிடுவாள்
கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
....கனவிலும் மறந்திடுவாள்
வெள்ளம் போலவே  கவலைப் பொங்கிடும் போதில்
...விவேகமாய் முடிவெடுப்பாள்!



“கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக