வியாழன், 2 ஜூலை, 2015

காலணியும் கால்களும்
கணவன் மனைவி போல
கால்களைப் பார்த்துக்
காலணிகள் கதைப்பதைக் கேளுங்கள்:
இன்னார்க்கு
இன்னாரென்று
எழுதி வைத்தான்
இறைவன் அன்று
உன்னோடு இருப்பேன் என்று
உனக்குத் தெரியுமா அன்று?
உன்னோடு எனக்கென்று
“ஜோடி” சேர்த்தது யார் இன்று?
என்னை “ஜோடி” என்பர்
நீ தான் என்றன் “ஜோடி” யானாய்
கல்லும் முள்ளும் படாமல்
காத்து வருகின்றேன்
அல்லும் பகலும் உன்னை
அயராத உழைப்பில் மனைவியாய்!
என்னை விட்டுச் சிலநேரம்
இருக்கும் பொழுது மனபாரம்
உன்னைக் காண மீண்டும்
உன்வாசலில் இருப்பேன் பலநேரம்!
வீதிவரை உறவானாய்
வீடுவந்ததும் கழட்டி விடுகின்றாய்
நாதியற்றவன் அல்லன்;
நான் உன்றன் துணைவி!
இறையில்லம் சென்று
இறைவனைத் தரிசித்து
இன்முகமாய் வரும்வரை
நிறைமனமாய் நானும்
நிற்கின்றேன் வாயிலிலே!
இருட்டிலே நீ
என்னை விட்டு விட்டு
குருட்டுப் பார்வையில்
குழம்பி மாற்றிப் போட்டாலும்
குத்திக் காட்டுவேன்
புத்தியில் படும்வரைக்கும்!
விடுப்பில் வந்து போகும்
வெளிநாட்டுக் கணவ்ன
விடுப்பு முடிந்ததும் என்னை
விட்டு விட்டுச் சென்றாலும்
வீடு வரும்வரை உனக்காக
வீட்டுக்குள் ஒளிந்திருப்பேன்!
ஆயினும்,
கல்லறைக்குச் செல்லும்
காலம் வந்து விட்டால்
சொல்லொணாத் துயரத்தில்
சோகமுடன் நானிருப்பேன்
சொல்லி விட்டேன் இப்பொழுதே!
ஆக்கம்:
“கவியன்பன்” கலாம்


0 கருத்துகள் :

கருத்துரையிடுக