வியாழன், 2 ஜூலை, 2015




இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்:



பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!


சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!


குறைகூறும் மக்களையும்
.......குணத்தாலே மாற்றிடுவாய்
மறைகூறும் பாதையினை
......மகிழ்வாக ஏற்றிடுவாய்!


பணியாவும் திட்டமுடன்
..........பகிர்ந்தேநீ செய்திடுவாய்
துணிவானத் தோற்றமதைத்
........துணையாகக் கொய்திடுவாய்!


கனிவான வார்த்தைகளைக்
........கவனித்தே பேசிடுவாய்
இனியாவும் வெற்றியாக
......இதமாக வாதிடுவாய்!


அறங்கூறும் பாதையிலே
,,,,,.,அசையாமல் நின்றிடுவாய்
புறங்கூறும் வாக்குகளைப்
.......புறந்தள்ளிச் சென்றிடுவாய்!


தெளிதூய்மை ஆடையிலே
.......தெரிவாக்கிப் பூணிடுவாய்
ஒளிவீசும் வாய்மையினை
......ஒழுக்கத்தைப் பேணிடுவாய்!


பலம்கொண்ட கல்வியாலே
......பயன்கொள்ளச் சேர்த்திடுவாய்
நலம்காட்டும் ஆற்றலினால்
......நயமூட்டப் பார்த்திடுவாய்!




பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்(அபுதபி)
பாடியவர்:   அதிரை இளம் முரசு ஜஃபருல்லாஹ் ( ஜித்தா)

0 கருத்துகள் :

கருத்துரையிடுக