என் விருப்பம்
பார்முழுதும் அமைதித்தென் றல்வீச விருப்பம்;
பகையென்னும் புயற்காற்று நீங்கிடவே விருப்பம்;கார்முகிலும் மும்மாரிப் பொழிந்திடவே விருப்பம்;
காடுகளும் அழியாமற் காற்றுவர விருப்பம்;
பசுமையெனும் தாய்மையைநான் காத்திடவேவிருப்பம்;
பயிரெங்கும் இயற்கையுரம் தழுவிடவே விருப்பம்;பசுமரத்தா ணியாய்மரபும் நினைவிருக்க விருப்பம்;
பைந்தமிழில் காவியங்கள் படைத்திடவே விருப்பம்;
முழுசுகமும் உடல்மீது முத்தமிட விருப்பம்;
முயற்சிகளால் வாய்ப்புவாசல் திறந்திடவே விருப்பம்;எழுதுவதும் எட்டுதிசை எட்டிடவே விருப்பம்;
எல்லார்க்கும் உதவிடவே என்கரங்கள் விருப்பம்;
கண்ணியமாய் மூத்தோரை மதித்திடவே விருப்பம்;
கற்றோரின் காலடியில் சுற்றிநிற்க விருப்பம்;புண்ணியங்கள் செய்வதனால் தீங்கொழிய விருப்பம்;
புவியெங்கும் பூமனங்கள் வாழ்ந்திடவே விருப்பம்
மதம்மொழியால் பிரியாத என்நாடு விருப்பம்;
மாணவர்கள் சாய்க்கடையில் வீழாமை விருப்பம்;நிதம்நடக்கும் வன்முறைகள் இல்லாமை விருப்பம்;
நீதிகளும் எல்லார்க்கும் ஆகத்தான் விருப்பம்;
மண்ணகத்தில் உள்ளவற்றின் மனங்கவர விருப்பம்
மண்ணுக்குள் சென்றபின்னும் புகழ்மணக்க விருப்பம்;விண்ணகத்தின் வானவர்கள் குடில்புகவே விருப்பம்;
வீணாகும் காலங்கள் முறைப்படுத்த விருப்பம்;
பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக விருப்பம்
பிள்ளைகளும் பெற்றோரை மதித்திடவே விருப்பம்;சுற்றத்தார் விலகாமல் சூழ்ந்திருக்க விருப்பம்
சுவனமாக வீட்டைத்தான் காணுதலில் விருப்பம்
"கவியன்பன்” கலாம்.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக