வியாழன், 2 ஜூலை, 2015

பார்முழுதும் படைத்தவனின் படைப்புகளைக் கண்டேன்
பரமனவன் அற்புதங்கள் அவைகளிலே கண்டேன்
கார்முகிலும் வெண்ணிலவும் மழைநீரும் கண்டேன்
கர்த்தனவன் எழுதிவைத்தக் கவிதைகளாய்க் கண்டேன்



வயல்வெளியில் காற்றோடு கதிராடக் கண்டேன்
வயலினைப்போல் இசைத்தேனைப் பிழிந்தளிக்கக் கண்டேன்
கயல்விழியின் கண்ணசைவில் கோடிசுகம் கண்டேன்
கடைக்கண்னைத் திறந்திட்டத் தமிழ்க்கன்னி கண்டேன்




சாடலுடன் வெகுண்டெழுந்துச் சமூகத்தைக் கண்டேன்
சாற்றுகின்ற பாக்களிலே அக்கறையைக் கண்டேன்
பாடலுடன் அறிவுரையும் இருப்பதைக் கண்டேன்
பாவலர்கள் அவைகளையும் பாராட்டக் கண்டேன்



கனவினிலே கவிதையெனும் காதலியைக் கண்டேன்
கண்முன்னே எனக்குமென்றும் எழிலாகக் கண்டேன்
நினைவினிலே அவளேதான் எனக்குள்ளே கண்டேன்
நீங்காத பற்றுடனே இருப்பதையும் கண்டேன்



அரபகத்தின் வாழ்க்கையிலும் தமிழின்பம் கண்டேன்
ஆசான்கள் அளித்திட்டத் தமிழுணர்வு கண்டேன்
மரபுவழிப் பாக்களாக ஊனெங்கும் கண்டேன்
மன்றத்தில் கவிபாட அழைப்பிதழைக் கண்டேன்



“கவியன்பன்” கலாம்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக