வியாழன், 2 ஜூலை, 2015



சந்த வசந்தம்” என்னும் கவியரங்கில் நடத்தப்பட்ட “எனக்குப் பிடித்த....” என்ற தலைப்பில் யான் அரங்கேற்றிய கவிதை உங்களின் பார்வைக்கு, மேலும், ஆங்கிருந்த பாவலர்கள் எனக்களித்த பின்னூட்டங்களும் காண்க,



கவியரங்கத்தலைவர் புலவர் இராமமூர்த்தி ஐயா அவர்கள் என்னைக் கவிபாட அழைத்த போழ்து:
2014-05-10 18:17 GMT+04:00 Ramamoorthy Ramachandran<rawmurthee@gmail.com>:

அடுத்து வரும் கவிஞர்தமை அழைக்க எண்ணி
ஆவலுடன் இருந்தஎனை ஆசையோடே
விடுத்த மடல் அதனாலே பிடித்தி ழுத்தார்!
மேன்மை மிகும் அமீரகத்தின் காதர் என்பார்!
கொடுத்திருக்கும் தலைப்பவர்க்கே பிடித்துப்போக
கூப்பிடுங்கள், என்கின்றார்!இறைவன் ஆணை*
இடுவதனால் கலாம்காதர் கவிதை ஏந்தி
இவ்வரங்கில் வருக!என அழைக்கின் றேனே! 
(*இன்ஷா அல்லா)
கலாம் காதர் வருக! கவிதை இன்பம் தருக!


அன்புடன் புலவர் இராமமூர்த்தி

எனது கவிதை அரங்கேற்றம்:

கடவுள் வாழ்த்து:

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!


தலைவர் வாழ்த்து:

புலமையில் மிக்கப் புலவரின் சீராம்
தலைமையில் யானும் தருவேன் கவிதையை
என்பதே மண்ணில் எனக்குக் கிடைத்திடும்
இன்பமாய் எண்ணினேன் இன்று.

அவையோர்க்கு வாழ்த்து:


கற்றவர் சபையில் களிப்புடன் வீற்றுப்
பெற்றவர் மகிழ்ந்திடும் பெருமிதம் அடைய
இந்த மன்றம் சந்தம் கூட்ட
வந்த பாவலர் வருக; வாழ்க!

தலைப்பு:
எனக்குப்பிடித்த மல்லிகையும்; மருதாணியும் (இணைப்பில் உள்ளபடி)

வெண்பாக்கள்:

தென்றல் முகர்ந்ததால் தேன்மலர் மொட்டவிழும்
உன்றன் கணவர் உரசியதால் மேனியெங்கும்
சென்று உணர்வும் சிலிர்த்திடும் காமனை
வென்று படுக்கையில் வீழ்த்து.



உன்னையும் என்னையும் உன்றன் கணவன்தான்
பொன்னுமிவ் வந்திப் பொழுதில் கசக்குவான்
காதலைக் காமக் கரையில் விளக்குவான்
காதரு கில்பூ கதைத்து.




காணுங் கரங்களும் கன்னச் செழுமையிலும்

நாணச் சிவப்புடன் நான்தந்த மாற்றம்
ஒருநாளும் மாறுமோ உள்ளன்பின் தோற்றம்
மருதாணிச் சொல்லும் மகிழ்ந்து


எண்சீர் விருத்தம்( விளம், விளம், விளம்,காய் -அரையடிக்கு):


ஈர்ப்பதில் மல்லிகை மணத்துடன் மருதாணி

..........சேர்ப்பதும் மனத்தினில் மயக்கமே வருதாமே
வார்த்திடும் பேச்சினில் இனிமையே உருவாகப்
..........பார்த்திடும் பார்வையில் அழைப்புதான் கருவாகிக்
கூர்த்திடும் சமிக்ஞையைக் கொண்டவன் திருவாக
.........மூர்க்கமும் இன்றியே முழுவதும் தருவானே
ஆர்த்திடும் உணர்வினைத் தீயதாய்க் கருதாமல்
.......தீர்த்திடத் திருமணம் நன்மையாய் வருதாமே!


ஆசிரியப்பாக்கள்:

கவலையும் சுழலுமே கனமுளத் தருணமாய்
அவளையும் தனிமையும் அணைத்திடும் பொழுதினில்
கணவனை அறிந்திடாக் கணங்களாய்க் கழிவதால்
மணமது புரிந்திட மணமகள் உடையினை
அணிந்திடும் மகிழ்வினை அகத்தினில் நிரப்பியே
மலர்ந்திடும் பொழுதினை மனத்தினில் வளர்த்ததால்
அழகுறுக் குழலுடன் அலைமுகில் வடிவென
மெழுகதுச் சிலையென முழுவதும் எழிலுடன்
மழலையின் இனிமையாய மயக்கிடும் குரலுடன்
நிழலது வழங்கிடும் நிகரிலாக் குளுமையும்
சுழலுரும் மணியிசைச் சுகந்தரும் நடையினில்
முழுவதும் இலகுவாய் மெதுநடை பழகுமே!



சுழலொரு புயலெனச் சுழன்றதன் விருப்பமும்
முழுவதும் மனத்தினில் மொத்தமாய்க் குடிபுக
அணைத்திடும் இலக்கணம் அனைத்தையும் அறிந்தவன்
துணையெனக் கிடைத்திடத் துளிர்த்தன மகிழ்ச்சியும்
தளதளச் சதையுடன் தடையிலா மிடுக்குடன்
பளபள விழியுடன் பளிச்சிடும் கவர்ச்சியில்
சுளைபலத் தரும்கனிச் சுவையினை வனப்பினில்
விளைந்துள உடலிது விளைத்திடக் கிடைப்பதால்
மறந்திடும் கவலையும் மணமகன் வருகையால்
உறவினில் பெருக்கிய உவகையில் செழித்ததே!



கூவிடும் ஓசையும் சேவலின் ஆண்மையும்

மேவிடும் வாலிபம் மேனியில் ஓங்கிடக்
கூட்டிய தோட்திறன் காட்டிய பேரெழில்
வாட்டிடும் ஆசையை வாழ்வினில் போக்கிடும்
நாளினை நோக்கியே நாட்களை ஓட்டிடும்
வேளையில் வேட்கையும் வேகமாய் நீண்டிடும்
ஆவலும் கூடுதே ஆண்மகன் மோகமும்
சேவலைப் போலவே சீரிளம் கூடுமே!


-- ”கவியன்பன்” கலாம்

பின்னூட்டங்ள்: கருத்துரைகள்; பாராட்டுரைகள்:
1)அதிரை கவியன்பன் அன்றலர் பூவாய்
மதியை மயக்கும் மணத்தின் - புதுமை
மல்லிகை தன்னை மருதாணி தன்னுடன்
சொல்லி விரித்தார் சுகம்!

மற்றைத் தமிழன்பர் வைக்கும்பின் னூட்டந்தான்
முற்றி முடிந்தபின் முன்வந்தே - சற்றென்
பின்னூட்டம் சொல்லிப் பிறகிங் கடுத்தவர்
தன்னை அழைத்தல் சரி!

அன்புடன் புலவர் இராமமூர்த்தி
2)

Pas Pasupathy

May 11 (2 days ago)
to santhavasantham
மல்லிகையும் மருதாணியும்
மங்கையும் காதலுடன் இணைந்து
மணக்கச் செய்தது கவிதையை!

பாராட்டுகள்!
3)

ramaNi <saidevo@gmail.com>

May 11 (2 days ago)
to santhavasantham
வெள்ளையின் மணமும் செம்மையின் கலையும் கொள்ளை அழகுறக் காட்டியது நன்று.
ரமணி

Subbaier Ramasami

6:02 PM (15 hours ago)
to சந்தவசந்தம்
அகத்துறை மேஎவிய்ழ் அழகுக்கவிதை
இலந்தை
4)

VETTAI ANANTHANARAYANAN

6:18 PM (14 hours ago)
to சந்தவசந்தம்
மல்லிமரு தாணிசெயும் மந்திர வித்தைசொலும்
மெல்லியலாள் பற்றியபா மேல்.
6)

Narayan Swaminathan<swaminathan.narayan@gmail.com>

9:45 PM (11 hours ago)
to santhavasantham
மல்லிகை வீசும் வாசத்தால்
மருதாணி மயக்கும் நேசத்தால்
கருத்தைக் கவரும் சொல்லால்
காதரின் பாட்டு வெல்லும் !
வாழ்த்துகள்.
சுவாமிநாதன்
(இங்கு நடக்கும் பல இந்தியத் திருமணங்களில் மருதாணி பூசுவது (மெஹந்தி) 
மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது; மல்லிகை இருந்தாலும் அலுங்காமல், நலுங்காமல்,
கசங்காமல், வாடாமல் இருக்கும் செயற்கை மல்லிகையே அலங்காரத்துக்கு பயன்
படுத்துகிறார்கள்.)




0 கருத்துகள் :

கருத்துரையிடுக