வியாழன், 2 ஜூலை, 2015

சொல்லக்  கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!

ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!

மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழி தேயும்

தோலுர்ணவு மட்டுமே தூண்டும் - அதற்குத்
......துணைசெய்யும் தோழமைதான் கள்ளமாய் வேண்டும்
பாலுணர்வுச் செய்கையில் பின்னி - இன்று
.....பாழ்பட்டுச் சாகுதடா  நாணமிலாக் கன்னி!

ஆளுமை என்னும் பெயரில்  - ஆண்கள்
.....ஆதிக்கம் செய்திடப் பெண்கள் துயரில்
மீளுதல் இல்லா அடிமை - வரன்
...மேலேதான் தட்சணை கேட்கும் கொடுமை!

சாதி மதங்களின் சண்டை  - அதனால்
......சாயும் மனிதனின் மாண்புள மண்டை
மீதி  யுளோர்களின் யாக்கை   -  என்னோகுமோ
.......மேதி னியிலுளோர் அச்சமுடன் வாழ்க்கை!


நாட்டினில் உள்ள நிலைமை - மாறிட
.....நாடுவோம் தூயநற் றொண்டின் தலைமை
பாட்டினில் சொன்னேன் கவியரங்கில் - இவைகளைப்
.....படைத்தவன் மாற்றுவான் இந்தப் புவியரங்கில்!



கொதித்திடும் எண்ணங்கள் சாடலாய் -ஈண்டுக்

....கொட்டியே தீர்த்தனன்  சந்தத்தின் பாடலாய்

மதித்திடும் பாவலர்  ஆன்றோர் --யாவரும்
...மதிப்பெண் இடுதலே யான்பெற்ற சான்றாம்!

0 கருத்துகள் :

கருத்துரையிடுக