அழைப்பு - 2
கவியன்பன் கலாம் - எனக்குக் கவிதை எழில்
விழியிரண்டில் கழிவிரக்கம் நிறைத்துக் கொண்டு
விருப்பமுடன் நோன்பியற்றி மகிழ்ந்து நின்றே
அழுதழுதே ஆசைகளை அறவே நீக்கி
அறவழியில் செல்வதையே அகத்தில் கொண்டு
தொழுதபடி மேலோர்கள் செல்லும் பாதை
துணையாகக் கொண்டபடி கடப்பார் ஆகிப்
பழுதெதுவும் போகாத கவிதை செய்யும்
பண்புடைய கலாம்காதர் அறியார் யாரே.
நாணல்மகன் செல்வழியில் தாமும் சென்று
நலமளிக்கும் கவிபலவும் நன்கு மாந்தி
பூணநல்ல மலர்போலே பாடல் செய்து
புகழென்றும் ஈட்டுகின்ற புலவர் தம்மைக்
காணவேண்டும் ஆசையினால் அழைக்கின் றேனே
கலாமிங்கே கவியெழிலைப் பொழியத் தானே.-சிவசூரி
என் கவிதையிடப்பட்டு அரங்கேற்றம்:
கவியரங்கம்- 38
என் கவிதையின் தலைப்பு: “எனக்குக் கவிதை எழில்”(கவிதையும் காதலியும்)
இறைவாழ்த்து:
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!
சபை வாழ்த்து:
சந்த வசந்தச் சபையோரை வாழ்த்தியே
இந்தக் கவிதையை இவ்விடம்- தந்தே
அரங்கேற்றம் செய்யும் அபுல்கலாம் யானும்
கரங்கூப்பி வந்தேன் கனிந்து.
ஒரு பா ஒருபஃது
எழிலாய்த் தெரியும் இதழைக் கடித்து
விழியால் நுழைந்து விளக்கம் படித்து
மொழியும் உணர்வை முழுதும் சுவைத்துக்
கழியும் கவிதையாய்க் காண். 1)
காண்பதும் ஆங்குக் கவிதை எழிலெலாம்
மாண்புள பெண்ணின் மருவிலாத் தோற்றமே
கேண்மையும் கேட்கக் கிளையும் மயங்கிட
ஆண்மையை ஈர்க்கும் அது 2)
அதனெழில் கூடும் அசையும் தொடையில்
மதுரமாய்ச் சீராய் மயக்கும் நடையில்
இதுவரை யானும் இதுபோல் சுவைக்க
எதுவரை போவேன் இயம்பு 3)
இயம்பும் கவிதை இதயம் விரும்பும்
நயமும் ஒலியும் நயமுடன் பேசும்
வியக்கும் அணிகள் விரவிக் கிடக்கும்
செயலை மறக்கும் செயல் 4)
செய்யப் படுமிந்தச் செய்யுள் வரிகளில்
நெய்யப் படுமந்த நேர்த்தியாம் பட்டினை
கையா லுடுத்திய கன்னித் திறமையை
மெய்யா லுமுணரும் மெய் 5)
மெய்தான் உடலும் மெதுவாய் அழியுமே
பொய்தான் கவிதையெனப் பொய்யாய் மொழிந்தாலும்
செய்யும் புலவரின் செய்யுள் எழிலெலாம்
உய்யும் புகழில் உயர்ந்து 6)
உயர்ந்து நிமிர்ந்த உணர்வை எழுப்பி
வியக்கும் புலமை விதைகள் நிரப்பி
மயக்கும் வழிகளில் மங்கை எழிலாய்
இயக்கும் கவிதை இனிது 7)
இனிக்கும் எதுகைகள் ஈரிதழ் போல
கனியாய்ச் சுவைக்கக் கவியின் எழிலாய்த்
தனித்து விளங்கும் தளையடி மோனை
அனைத்தும் அழகியின் அன்பு 8)
அன்பினால் ஈர்க்கும் அழகிய மங்கைபோல்
என்பையும் ஆட்டும் எழிலார் கவிதைகள்
மன்பதை எங்கும் மகிழ்ச்சியை ஊட்டிடும்
என்பதைச் சொல்லுவேன் இன்று 9)
இன்று படித்த இனிய கவிதையால்
நன்றாய் உணர்வோம்; நளின வரிகளில்
குன்றா இளமை; கொழிக்கும் வளமையில்
என்றும் கவிதை எழில் 10)
0 கருத்துகள் :
கருத்துரையிடுக