வியாழன், 2 ஜூலை, 2015


முடியாது போகும் என்று முயல்வதை விடுதல் கண்டு
முடியாத செயலின் எல்லை முற்றிலும் இல்லை இல்லை
விடியாத இரவும் இல்லை விலக்கிடுச் சோம்பல் தொல்லை
தடைகள்தான் வந்தும் தூண்டும் தடகளம் போலத் தாண்டு!

இல்லாமல் போகா வாய்ப்பு இதுவெலாம் மனத்தின் ஏய்ப்பு
புல்லான போதும் கையில் புடமிடும் தங்கம் செய்யும்
வில்லான உறுதி மட்டும் விரைவுடன் முடிவை எட்டும்
சொல்லோடு செயலும் நின்றுச் சோம்பலும் ஒழியும் இன்று!

மல்லாந்துப் படுத்து வீணே மதியையும் சிதைத்தல் தானே?
கல்லாத போழ்தும் நெஞ்சில் காட்டிடும் அக்னிக் குஞ்சாய்ச்
சொல்லாலும் விளங்காச் சிந்தைச் சுடர்விடப் பொறியின் விந்தை
நில்லாமல் உழைக்கும் மெய்யும் நிதர்சனம் இதுவே மெய்யாம்!

உன்மனத்தில்  தோன்றிச் சுட்டும் உதிப்பினால் வெற்றிக் கிட்டும்
பன்முகத்தில் உன்றன் பார்வைப் பளிச்சிடத் தோன்றும் தீர்வே
நன்மையைநீ விரும்பிச் சேர்த்தால் நலமுடன் திரும்பிப் பார்த்தால்
பன்மையில்காண் வழிகள் ஆங்குப் பயனுறச் செழிக்கும் ஓங்கி!

வரிகளின் வரம்பு: பதினாறு அடிகள் மட்டும்
யாப்பிலக்கணம்:
காய்+மா+தேமா(அரையடிக்கு)
+விளம்+மா+தேமா(அரையடிக்கு)

0 கருத்துகள் :

கருத்துரையிடுக