வியாழன், 2 ஜூலை, 2015







மனமென்னும் புத்தகத்தில்
.....மலிந்துள்ள பக்கமதை
தினம்நாமும் பார்க்கையிலே
...திருந்தத்தான் வைத்திடுமே!


மருவில்லா எண்ணமது
......மனத்தின்பால் உள்ளிருக்க
உருவில்லா வண்ணவொளி
.....உருவாகும் பக்கமன்றோ?


வெறுந்தாளின் பக்கமதாம்
.......விரிந்துள்ள உள்ளமெலாம்
நறுந்தேனாய் வித்திடுக
......நலமான வார்த்தைகளாய்!


கருந்தேளின் நஞ்சினைப்போல்
.......கருத்தாளும் நெஞ்சுகளும்
வருந்தாமல் கொட்டுகையில்
....வழிதோறும் முட்களாகும்!


பணந்தேடும் பாரினிலே
......பரிதாபம் ஏதுமில்லை
குணந்தேடிப் பார்க்கையிலே
....குறைவானப்  பக்கமதாம்!


கடல்போல ஆழமதாம்
....கனிவான மாதருள்ளம்
மடல்போட்டும் கூறாத
.....மதியாளும் பக்கமதான்!


தடுமாறும் பக்கமதால்
......தடுப்பாகும் எக்கணமும்
நெடுநாளும் நின்றிடுமோ
....நினைத்தாலும் வென்றிடுமோ?
....

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம், அபுதபி
பாடியவர்: அதிரை இளம் முரசு ஜஃபருல்லாஹ், ஜித்தாஹ்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக