ஞாயிறு, 12 ஜனவரி, 2020




அமல்களை மறந்து விட்டீர்கள் _
ஒற்றுமையைக்
குறைத்து விட்டீர்கள்
இது தான் மார்க்கமா ? - இல்லை
நீங்கள் செய்யும் மூர்க்கமா?

பிரித்தாளும் சூழ்ச்சிகளை
பிரித்தானிய ஆட்சி முதலே
சரியாகவே செய்வதையும்
புரியாமலே பிரிந்து நிற்கின்றீர்கள்!

நரிகளின் சூழ்ச்சியில்
நாமாகவே வீழ்ந்து விட்டீர்கள்
தெரிந்தே ஈகோ என்னும்
தீயநெருப்பில் சாய்ந்து விட்டீர்கள்!

உள்ளூராட்சி முதல்
உலகாட்சி வரைக்கும்
உளளங்களால் வேறுபட்டீர்கள்
ஒற்றுமையில் மாறுபட்டீர்கள்!

உஹதுப் போரின் சான்றை
உள்ளத்தில் ஏற்க மறந்து விட்டீர்கள்
ஹுதைபியா உடன்படிக்கை மட்டுமே
கூட்டணித் தர்மத்தில் கூட்டி வருகின்றீர்கள்!

தரையிலும் கடலிலும்
விரைந்து வருகின்றன சோதனைகள்
குறைகளை உணரவில்லையா?
குற்றமிழைத்தோர் நாமல்லவா?

அமீர் எனும் தலைமையின்றி
அமீருக்குக் கட்டுப்படும் குணமுமின்றி
திசை மாறிய கப்பலாய்த்
திரையில் தத்தளிக்கின்றோம்!

இத்தனை பிரச்சினைகளிலும்
இன்னமும் வழிகாட்டல்கள் இல்லையே
மொத்தமாகக் கூடுகின்றோம்
முடிவுகள் எட்டாமலே.....!

"போரைச் சந்திக்கச் சோம்பல்
போர்வையை விலக்கி எழுக
ஃபஜ்ர் முதல் இஷா வரை
பள்ளிக்குச் சென்று தொழுக!

சஹாபாக்கள் பெற்ற வெற்றி
சதாவும் சுஜூதில் பட்ட நெற்றி
நிராயுதபாணிகளல்ல நாங்கள்
நெஞ்சில் ஈமானும் எகீனும் ஆயுதங்கள்!

வேதம் சொன்ன ஒற்றுமையே சாட்டை
வேகமாய்க் காப்போம் தாய்த்திருநாட்டை
போதும் போதும் வாக்குவாத மேடைகள்
பூணுக அமல்களெனும் சீராடைகள்!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக