ஆதாம் ஏவாள்
ஆரம்பித்த உறவுகள்
சாத்தான் புகுந்து
சாய்த்தான்; அதனால் - பிரிவுகள்
அண்டை வீட்டோடும்
அண்டை நாட்டோடும்
சண்டை போட்டே
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்....
உறவு ஓர் அதிசய மரம்:
உள்ளன்பே அதன் உரம்;
உதவும் கரம் தான் உண்டு
அதனைத் தாங்கும் தண்டு;
அன்பு ஊற்று தான்
இன்பக் காற்று தரும் இலைகள்;
உறவுக்கு மறுபெயர் "கிளைகள்"
உட்காரட்டும் பாசப்பறவைகள்....
உணர்வு தான் ஆணி வேர்;
உணவு அதற்கு உளமார மன்னிக்கும் நற்குணமே
சட்டைப் பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டும் உறவுகள்;
சற்றே நிலை மாறினால்
சட்டை செய்யாது திசை மாறும் பறவைகள்
விலா எலும்பின்
விலாசம் காண
விவாக உறவுகள்
உயிர் காக்கும்
உண்மைத் தோழமை
உயிருள்ள வரை மறவா உறவு
தொப்புள் கொடியாய்த்
தொடரும் இரத்த உறவு
ஆயிரம் உறவுகளிருந்தாலும்
தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு
கற்ற கல்வி
உற்ற நண்பனாய் உதவும் உறவு
நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு
இவ்வுறவை பேண
இறுதிவரைப் போராடு
எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு நின்றுவிடும்;
எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லா நேரமும் அடியான் கொண்ட "உறவு"
எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடும்!!!!
எல்லா உறவுகளயும் பேணுவோம்
எல்லார்க்கும்- இறையோனுக்கும்
பகைவனான சாத்தானைப்
பகைத்திடுவோம்; அதனால்
கலகமே இல்லாத
உலகமே காணுவோம்........................!!!!!!!!!!!!!
--
"கவியன்பன்" கலாம் அதிராம்பட்டினம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக