என்னையும்தான் கவிதை
எண்ணவைத்த கவிதை
புன்னகையால் காதலைச்
சொன்னவொரு தேவதை
சேலைச் சோலையில்
சேர்ந்த மெய்யெழில்
தோலை மொய்த்திட
தோன்றும் மெய்விழி!
சின்னதாய் உன்சிரிப்பில்
சிந்திடும் முத்தொளியில்
மின்னுதே மின்னொளியில்
மேயுதே உள்ளொளியை!
வீற்றிருக்கும் இடந்தேடி
வீதியெல்லாம் கடந்தேனே
காற்றினிலே கலந்ததுவோ
காதலித்த நினைவுகளும்!
இழுத்தடிக்கும் உன்றன்
இறுமாப்பு உத்தி
கழுத்தறுக்கும் வேலை
கடிதாக்கும் கத்தி!
காதலைச் சொல்லாக்
காலமெலாம் பாரம்
வேதனைத் தீயை
வேகவைக்கும் நேரம்!
குறிப்பு: அண்மையில் ஒரு கவியரங்கில் என்னைப் பற்றிய அறிமுகத்தில் விருத்தங்களை எழுதும் திருத்தொண்டர் என்றும்; இறையியல் எழுதுபவன் என்றும் சொன்னதால் விரக்தியுற்றேன்; என்னாலும் காதல் நெஞ்சத்துறையும் காதலர்களை எண்ணி எழுத இயலும் என்பதைக் காட்டவே இந்த வஞ்சித்துறையாகும்.
காதலில்லாமல் கவிஞனாகியிருக்க முடியாது;கவிஞனாகவிருந்து கொண்டு காதலிக்காமல் இருக்க முடியாது. இப்பொழுதெல்லாம் மேசைக் கவிதை(மரபுப்பா)விற்குக் கைத்தட்டல்கள் வாங்குவதை விட, மேடைக் கவிதை(புதுக்கவிதை)க்குத் தான் கைதட்டல்கள் வாங்க முடியும் என்பதும் நான் கண்ட உண்மை; அன்புடன் புகாரி அவர்களை வரவேற்று சென்றமாதம் துபையில் பாடிய என் கவிதையில் ஒவ்வொரு வரிகளின் முடிவிலும் நான் எதிர்பார்த்திராத கைதட்டல்கள் என்னும் பாராட்டுத் தாலாட்டுக் கிட்டியது என் கவிக்குழந்தைக்கு; ஆனால், அன்றைய கவியரங்கில் நான் படித்த வெண்பாவோ, விருத்தமோ எவர்க்கும் போய்ச் சேரவில்லை என்பதை விட, அந்தக் கவியரங்கத் தலைமை கூறினார்கள் “ இவரின் கவிதைகளைக் கேட்டு என்னால் மதிப்புரை வழங்க இயலாது; ஆனால் பலமுறை படித்தே உணர இயலும்; இவரை “திருத்தொண்டர்” என்று அழைக்கின்றேன்”என்றதும் எனக்குள் இந்த வேறுபாடுகளை உணர முடிந்தது. அதனால் இனிமேல், சந்தவசந்தம் போன்ற சான்றோர்கள் குழுவுக்கு மட்டும் மரபுப்பாக்களையும் (மேசைக் கவிதைகளையும்); கவியரங்கங்களுக்கு (குறிப்பாக இளைஞர்கள் குழுவுக்கு) மேடைக் கவிதைகளாம் புதுக்கவிதைகளையும் புனைந்திட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக