இசைமுரசின்
இன்னொலி
இன்று ஓய்ந்தது!
நாகூரின் வானம்பாடி
நாயனைத் தேடி ஓடியது!
சிங்கக் குரலோனின்
சங்கநாதம் எங்கே கேட்போம்?
மரபுப் பாக்களின் ஓசையும்
அரபு மொழியின் அழகு நயமும்
எவர்தான் இனிமேல்
இவர்போல் ஒலிப்பார்?
பிலால்(ரலி) அவர்களின்
மரணத்தைப் பற்றிப் பாடி
பிழிய வைத்த குரலே
உன்றன் மரணத்தால்
உடைந்துவிட்டது இதயமே!
ஓடி வருகின்றான்
உதயச் சூரியன் என்று
பாடிய பாட்டால்
பட்டி தொட்டியெல்லாம்
கட்சியை வளர்த்தாய்!
கண்ணியமிகு
காயிதேமில்லத்(ரஹ்)
கண்ணீருடன் கேட்பார்கள்
உன்னிடமிருந்து
உருகும் பாடலை
இறைவனிடம் கையேந்துங்கள்
இந்து முஸ்லீம் வேறுபாடின்றி
நிறைவுடனே யாவரையும் பாட வைத்து
நிம்மதியாய்ச் சென்று விட்டாய்!
ஆரத்தழுவி ஆவி பிரிய
ஆண்டுகள் பல முன்பே
ஆசைப்பட்டது
இன்று நிறைவேறியதோ
இறைவனும் , இரசூலும்(ஸல்)
இரசித்த பாடல்கள் அல்லவா
இதயக் கூட்டிலிருந்து வந்தவைகள்!
மண்ணறைக்குட் சென்றாலும்
மண்ணகம் மறவாது
மங்காது உன்றன் கீதம்!
மரணத்தை நினைவூட்டினாய்
மரணித்த பின்னும்
மரணத்தை நினைவூட்டுவாய்
மறக்க முடியாத உன்றன் பாடல்களால்!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக