சனி, 8 ஆகஸ்ட், 2015

கவியரங்கத் தலைவர் ,: என் ஆசான், கவிவேழம், கவிமாமணி, இலந்தை ஐயா அவர்கள் என்னைக் கவிபாட அழைத்த அழைப்புக் கவிதை:
கவியரங்கம் 1 அழைப்பு 9 கவியன்பன் கலாம்
கட்டளை இட்டுக் கவிதரச் சொல்கின்றேன்
தட்டுக இந்தத் தளம்
(கட்டளை- கட்டளைக் கலித்துறை)
தளர்ச்சி அகற்றித் தமிழ்யாப் பதனைச் சரிவரவே
உளத்தில் நிறுத்தி உடனுக் குடனே உறுதிசெய்து
வளர்ச்சி அடைந்து வகைவகை யாய்ப்பா வடித்து
கவிக்களத்தில் சிறக்கும் கலாமே வருக கவிதரவே!

ஏட்டில் மனத்தினை நாட்டியே கற்றவை
காட்டுக இங்கே கலாம்.
இலந்தை 5-3-2015

என் கவிதை: கவிதையின் தலைப்பு; அடடாவோ அடடா

நிலவில்பெறும் ஒளியில்நிதம் நிகழும்கதி ரவனின்
உலவும்பெரு வெயிலில்நிஜம் உணரும்நிலை யுளவர்
பலமாயெழுந் துவரும்கடற் பரப்பும்வியந் தவரும்
அலகின்றியே வழங்கும்புகழ் ”அடடாவிது அடடா”

பகலும்வரும் இரவும்வரும் பனியும்வரும் உடலில்
சுகமும்வரும் துயரும்வரும் சுழலும்நிலை எவனால்?
நகமும்வரும் முடியும்வரும் நடக்கும்திறன் உணர்ந்தால்
அகமும்பெறும் அறிவில்வரும் ”அடடாவிது அடடா”


கருவாய்ப்புகுந் ததுதங்கியே கனமாய்த்துளிர்ப் பதுகாண்
உருவாய்க்கொடுத் தவனேபையில் உணவும்வழங் குதற்காண்
இருளாம்திரை யதனில்சிசு இருக்கும்படித் தரம்காண்
அருளால்புரிந் தவர்சொற்றொடர் ”அடடாவிது அடடா”

”கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக