சனி, 8 ஆகஸ்ட், 2015

‘‘ஒரு விகற்ப பஃறொடை வெண்பா:

பெற்றவர் நேசம் பெருமைமிகு காதலே
கற்றவர் கல்வியில் காமுறுதல் காதலே
குற்றமே செய்யினும் கொஞ்சும் குழந்தைகளை
வற்றிடா அன்புடன் வாழ்த்துதல் காதலே
உற்றவுன் இல்லாளை உண்மையாய்க் காதலி
சுற்றமும் நட்பும் சுழன்றுன்னை நேசிக்க
நற்றவம் செய்தலும் நன்று



கலி விருத்தம்

காதல் கூறிடும் காதலர் கூட்டமே
காதல் என்னவாம் கண்டவர் விண்டிலர்
காதல் தோற்றமும் காட்சியாய்க் காட்டிடார்
காதல் உள்ளதைக் காண்பவர் எங்குளர்?

ஐயம் நீங்கிய அன்பெனும் ஓரிறை
மெய்மைக் காட்சியை மெய்யினால் தீண்டிடார்
பொய்மைக் கண்களும் பார்த்திடாத் தன்மையில்
மெய்மைக் காதலும் மாவிறை போலவே!

பல விகற்ப இன்னிசை வெண்பா:


உறவும் பிரிவும் உணர்த்தும் பொருளை
இரவும் பகலும் இணையாது காட்டும்
கரையைத் தழுவிடும் காதல் அலைகள்
விரைவில் இணைய விரும்பு



காதலி யுள்ளமதைக் கண்டு பிடிக்கவே 
சாதலே வந்தும் சடைவின்றிக் காதல் 
கடலின் கரைவிட்டு நீந்தும் அலைபோல் 
மடலென்னும் தூதால் மகிழ் 



வாழும் வரைக்குமே வற்றாத் துடிப்புடன்
சூழும் பகைகண்டு சோர்ந்திடாத் தன்மை;
கரையினைத் தேடிக் கடலலைகள் மீண்டும்
கரைக்கு வருவது காண்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக