சத்திய போதனை நித்தமும் கூறவே
புத்தியைத் தீட்டினர் உத்தமர்த் தோழரே
சுத்தமாய் மாறினர் மொத்தமும் மார்க்கமாய்
எத்தனை சோதனை அத்தனை தாங்கினர்!
அண்ணலின் வாழ்வினை எண்ணிலாத் தோழரும்
கண்ணென போற்றினர் மண்ணக வாழ்விலே
விண்ணகச் சோபனம் எண்ணியே வாழ்ந்தனர்
புண்ணியம் சேர்த்தனர் கண்ணியம் காத்தனர்!
இன்னலும் நோக்கிடாத் தன்னலம் பார்த்திடாச்
சொன்னதைச் செய்தவர் சொன்னதைச் செய்தனர்
நன்னபிக் கூறிய நன்னெறி மீதினில்
கன்னலாய் ஈர்த்திடத் தன்னுயிர் ஈந்தனர்!
வெம்மையாம் தீயினில் நம்மையும் வீழ்த்திடாச்
செம்மையாம் மார்க்கமும் செம்மலாம் தூதரும்
நம்மிடம் சேர்த்தனர் இம்மையின் வாழ்விலும்
நிம்மதி கூடிட எம்மிடம் தந்தனர்!
இற்றைய வாழ்வினில் வெற்றியை ஈட்டிடக்
குற்றமே செய்திடா நற்றவப் பாதையில்
பெற்றிடு நேர்வழி; கற்றிடு மார்க்கமும்
உற்றவர் தோழரைப் பற்றியே சென்றிடு
பாடலாசிரியர்: அதிரை கவியனபன், அபுதபி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக