செவ்வாய், 31 மார்ச், 2020


தலைப்பு : 


எங்கே துவங்கி இங்குவந்தோம் 
       என்ன தான்நாம் செய்கின்றோம்
எங்கே சென்று முடிந்திடுவோம்
        என்று தான்நாம் அறியாமல்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம் 
        இலக்கே இல்லாப் பயணமென
இங்கே வந்து இயற்றுகின்ற 
         இனிய பாடல் சொல்லட்டும்!

தன்னை யறிந்தால் இறையவனைத் 
         தானே யறிவான் என்றனரே
தன்னை யறியத் தனிநேரம் 
         தானே ஒதுக்க முடியாமல்
தன்னைச் சுற்றித் தனியுலகம் 
         தானே போட்டுக் கொண்டதனால்
இன்னும் அறியா மல்நாமும் 
        எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

முன்னோர் சொல்லை ஏற்காமல் 
            முட்டாள் என்றே சொல்லுகின்றோம்
பின்னோர் சொல்லில் மலிந்துள்ள 
             பிழைகள் காண முடியாமல்
இன்னல் வந்தால் முடிவுகளை 
              எடுக்க முடியாக் குழப்பத்தில்
பின்னே நோக்கிச் செல்வதனால் 
             பிறகு எங்கே போகின்றோம்?

வாசிப் பதையும் நிறுத்திவிட்டோம் 
         வளமார் தமிழை மறந்துவிட்டோம்
நேசிப் பதையும் நிறுத்திவிட்டோம் 
              நெஞ்சில் ஈரம் துறந்துவிட்டோம்
யோசிப் பதற்கும் நேரமின்றி 
             எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
காசில் குறியா யிருக்கின்றோம் 
               களவும் செய்யத் துணிந்துவிட்டோம்!


வேங்கை தின்ற மனிதனையும் 
            வேடிக் கைதான் பார்த்தோமே
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம் 
           இதயம் இல்லா மானிடராய்?
ஆங்கே ஒருவர் யோசனையை 
         ஆர்க்கும் வழங்க முயன்றனரோ?
தாங்கள் பதியும் விழியத்தில் 
          தானே கவனம் செலுத்தினரே!

மண்ணின் ஆதிப் பழக்கமெங்கே 
           மரபும் உடையும் மாறியதேன்?
விண்ணில் பறக்க முயன்றோமே 
          வியர்வை வழியும் விவசாயி
புண்ணாய் வெந்து மடிவதையும் 
           புரியா தெங்கே போகின்றோம்?
உண்ணும் நேரத் திலொருநொடி 
         உணர்வோம் உழவன் நிலையையுமே!

காடுகழனிதோட்டங்கள் 
        காசு பணத்தால் அழித்துவந்த
வீடு என்னும் காடுகளால் 
        வீட்டுக் குள்ளே காற்றெங்குக்
கூடும் என்று சிந்தையின்றிக் 
       கூறு கின்றோம் காற்றில்லை
ஏடும் உரையும் இருந்தென்ன 
       எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

பட்டி தொட்டி எங்கணுமே 
      பசுமைப் புரட்சி செய்திடுவோம்
எட்டிப் பார்க்கும் எம்வீட்டில் 
      இசைக்கும் காற்றும் மழையுடனே
தட்டிக் கழிக்கும் அதிகாரம் 
      தரமில் மவுலி வாக்கத்தின்
கட்டி டங்கள் விழுந்தனவே 
      காசால் எங்கே போகின்றோம்?



கவியன்பன்” கலாம்















0 கருத்துகள் :

கருத்துரையிடுக