புதன், 23 செப்டம்பர், 2015

மக்கா பயணம்

இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.
கஃபா:

சாந்தம் பொழிய சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

ஜம்ஜம் நீர்

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையி லுண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

அரஃபாத்
மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞசை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

ஹஜ்
பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைபோல் பாவம் களைந்து
புடம்போட்டத் தங்கமாய் பூமியில் வாழ
திடமாக மாற்றும் திறன்,

உள்கிய்யா(குர்பானி):

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.

-அதிரை கவியன்பன் கலாம்,அபுதாபி

0 கருத்துகள் :

கருத்துரையிடுக