செவ்வாய், 9 ஜூன், 2015

மனக்குளத்தில் தூசிகளாய்

.....மடிந்திருக்கும் வேளையிலே

கனக்குமந்தப் பாவமெலாம்

.....கழுவுகின்ற மாதமன்றோ?


உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன்!

பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருந்திட்ட
.....மெய்யான நோன்பாகும்!

ஆயிரம் திங்களினும்
ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்

பாய்ச்சும் இறைவனேநீ!

எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா?

பசிவந்தால் பத்துகுணம்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் நற்குணங்கள்!

ஷைத்தானை விலங்கிட்டுச்
.....சாதகமாய் நமக்காக
வைத்தானே இறைவன்தான்
.....வாழ்த்துகிறேன் அதற்காக!

தொழுகையின் வழியாகத்
.....தூயமனம் பெறுகின்றேன்
அழுகையின் வழியாக
.....ஆசைகளைத் துடைக்கின்றேன்!

கவனித்துப் பிழையறிந்து
...கண்களிடும் துளிகளலாம்
சுவனத்தின் மரங்களுக்குச்
....சொந்தமான விதைகளாகும்!

அழுகின்றேன் அல்லாஹ்வே
.....அரவணைப்பாய் அர்ரஹீமே
தொழுகின்றேன் தூயோனே
.....துடைத்திடுவாய்த் தீங்குகளை

1 கருத்துகள் :


  1. தொழுகையின் வழியாகத்
    .....தூயமனம் பெறுகின்றேன்
    அழுகையின் வழியாக
    .....ஆசைகளைத் துடைக்கின்றேன்! நிதர்சனமாக வரிகள்

    பதிலளிநீக்கு