செவ்வாய், 9 ஜூன், 2015

யார் கவிஞன்?

அன்பின் விழிகளில்
அனைத்திலும்
அழகைக் காண்பவன்

உள்மனத்தில்
ஊடுருவும்
ஊதாகதிர்
உள்ளவன்

உணர்வுகளை
உள்வாங்கி
உணர்வுகளைக்
கொப்பளிப்பவன்

மலரின் வாசத்திலும்
மழலையின் பாசத்திலும்
மண்டிக் கிடப்பதை
மனக்கண்ணாடியில்
பிரதிபலிப்பவன்

காதலைப் பாடுவான்
காமுகனைச் சாடுவான்
வீரத்தைப் போற்றுவான்
வீண்கொலைகளைத் தூற்றுவான்

வண்ணத்துப் பூச்சியின்
எண்ணத்தையும் வார்த்தைக்
கிண்ணத்தில் வடிப்பவன்

சாதிமத வேறுபாடு
சார்ந்திடான்
நீதியொன்றை மட்டும்
நிலைநாட்டுவான்

அக்கினிக் குஞ்சும்
அவனே
அன்புமிகு நெஞ்சும்
அவனே

மகான்களிடம்
மாடு பேசியது
கன்றும் மரமும்
கதைத்தது

கவிஞனிடம்
அசையும் பொருள்
அசையாப் பொருள்
அனைத்தும்
இரகசிய உணர்வால்
இரசித்து இரசித்து
இன்பகீதம் பாய்ச்சும்

”கவியன்பன் கலாம்”

1 கருத்துகள் :

  1. உணர்வுகளை
    உள்வாங்கி
    உணர்வுகளைக்
    கொப்பளிப்பவன் . அவனே கவிஞன்

    பதிலளிநீக்கு