செவ்வாய், 9 ஜூன், 2015

புழுதிக் காற்றே என்று
புலம்பிடவில்லை நாங்கள்
அழுதுச் சாற்றவுமில்லை
அவனே அறிவான்


ஆற்றல்மிக்க எங்களின்
அயராத உழைப்புக்கு 
காற்றே நீ தானே
தோற்றுப்போனாய்!


கரைகாணா எங்களின்
கடின உழைப்பைக் கண்டு
அரைநாளுக் குள்ளாக
அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!



நெருப்பின் ஆற்றலை
நேசரின் நம்பிக்கை வென்றது
விருப்பமுடன் குளிர்ந்தே
வியப்பினைச் சொன்னது


கத்திக்கு ஆற்றலில்லை
கலீலுல்லாஹ்வின்
பக்திக்கு முன்னால்
பணிந்து விட்டது!


கடலுக்கு ஆற்றலில்லை
கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
திடலாக மாறியதும்
திகைப்புக்கு ஆளானோர்


அத்தனை ஆற்றலும்
அல்லாஹ் ஒருவனுக்கே!
இத்தரையில் நிகழும்
இவைகளே சான்றுகள்



இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
இத்தனை ஆற்றலும்
குறையேதும் செய்யாது போலவே
கூவி வந்த புயற்காற்றே


எதிர்நீச்சல் போட்டோம்
எதிர்வந்த  வேகத்தை
எதிர்த்தே போராடினோம்
என்னவாயிற்று உனக்கு?


மண்ணுக்குள் சென்றதும்
மண்ணே எங்களை உண்பாய்
மண்ணையும் உண்டோமின்று
மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!


உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
உழைப்பாற்றல் வென்றதை
உன்னையும் எங்களையும்
உருவாக்கியவனிடம் சொன்னாயோ?


“கவியன்பன்” கலாம், அபுதபி



1 கருத்துகள் :


  1. மண்ணுக்குள் சென்றதும்
    மண்ணே எங்களை உண்பாய்
    மண்ணையும் உண்டோமின்று
    மண்ணுக்குள் செல்லும் முன்பாய்! அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு