ஞாயிறு, 19 ஜனவரி, 2020


தலைப்பு: *மரபைக் காப்போம்*


வேதம் படிக்கும் பொழுதினிலே
*******வேக மாகப் பதிவதிலும்;
ஓதப் படும்யா வுமேயினிதாய்
******ஓங்கிச் செவியில் ஒலிப்பதிலும்
நாத மிலங்கும் இலக்கணமே
******நானும் உணர்ந்தேன் மரபினிலே
ஆத லினாலே மரபுகவி
*****யாத்து வழங்க விழைந்தனனே


உச்சக் குரலில் உரைத்திடினும்
******உள்ளம் பதியாப் புதுகவிதை
அச்சாய்ப் பதியும் மரபினிது
******அன்புக் குழந்தை அழுதிடினும்
மெச்சு மிசையில் நிறுத்திடுமே
******மெல்லத் தடவும் மரபினிது
அச்ச மகற்றும் திருக்குறளும்
******அவ்வைப் பாட்டும் மரபுகவி


அள்ளித் தெளித்த அவசரமே
*****அங்கே புனையும் வசனகவி
வெள்ளம் அருவி விழுவதுபோல்
*****வேகம் தருமே மரபுகவி
உள்ளம் மறவாப் பழையபாடல்;
******உண்மை இதுதான் மரபுவழி
அள்ளு மழகு இலக்கியமே
******ஆன்றோர் பணிகள் துலங்கிடுமே



"கவியன்பன்' கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக