செவ்வாய், 14 ஜனவரி, 2020




வாய்க்கால் தண்ணீர் வந்திடும்
வாய்ப்பு மில்லை; பெய்திடும்
பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்
பேரா பத்தால் நெற்கதிர்
காய்த்து வந்தும் பொய்த்தது
காலம் தோறு மிந்நிலை
மாய்த்துக் கொள்ளும் மக்களோ
மங்கிச் சொல்லும் “பொங்கலோ”


பொங்க லன்று பொங்கிடும்
பொங்கற் சோறு போலவே
எங்கு மின்பம் தங்கிட
எம்வாழ்த் தாலே பெற்றிட
பங்க மில்லா வாழ்வினைப்
பற்றிப் போற்றி வாழ்ந்திட
அங்க மெங்கும் பொங்கிடும்
அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்


சோற்றில் கையை வைத்திட
சேற்றில் காலை வைத்திடும்
ஆற்றல் மிக்க மக்களை
ஆர்வம் கொண்டு வாழ்த்திடு
ஏற்றம் பெற்ற ஏரினை
ஏந்திச் சிந்தும் வெற்றியால்
மாற்றம் பெற்று முன்வர
மக்க ளெல்லாம் போற்றுவோம்!

வாழ்வா தாரம் நின்றதால்
வந்த பொங்கல் சென்றதே
தாழ்வாய்ப் போன அவர்நிலை
தமிழர் நாமும் நினைக்கவே
வாழ்த்த மனமு மின்றியே
வந்த வார்த்தைக் குன்றியே
ஆழ்ந்த மனத்தின் பரிவினால்
ஆக்கும் பொங்கல் பரிசிலாய்

ஆங்குச் சென்று களித்திட
அனுப்பி வைப்போம் நன்கொடை
தேங்கும் பணமும் செல்லுமே
துயரம் துடைக்கச் சொல்லுமே
நாங்கள் செய்யு முதவியும்
நமக்குச் செய்த வுழவினை
வாங்கிச் சென்றோ மாதலால்
வழங்கும் நன்றி யாகுமே




--
”கவியன்பன்” கலாம்,

0 கருத்துகள் :

கருத்துரையிடுக